உலகின் முதல் புகாட்டி சிரோன் காரை பெருந்தொகைக்கு வாங்கிய சவூதி இளவரசர்

Loading...

உலகின் அதிவேக கார் என்ற பெருமைக்குரிய மாடல் புகாட்டி வேரான். கடந்த ஆண்டு புகாட்டி வேரான் காருக்கு நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி எண்ணிக்கை இலக்கு நிறைவடைந்ததையடுத்து, அதன் வழியில் புதிய சூப்பர் காரை புகாட்டி நிறுவனம் உருவாக்கியது. புகாட்டி சிரோன் என்று பெயரிடப்பட்ட அந்த பல கோடி விலை கொண்ட சூப்பர் காருக்கு பெரும் கோடீஸ்வரர்கள் போட்டா போட்டிக் கொண்டு முன்பதிவு செய்தனர். இந்த நிலையில், முதல் புகாட்டி சிரோன் சூப்பர் காரையும், அதன் கான்செப்ட் மாடலையும் சவூதி இளவரசர் பதர் பின் சவூத் பெரும் தொகையை கொடுத்து வாங்கியிருக்கிறார்.
இரண்டு கார்கள்
முதல் புகாட்டி சிரோன் காரின் புரோட்டோடைப் மாடலையும், புகாட்டி சிரோன் கார் வடிவமைப்புக்காக உருவாக்கப்பட்ட விஷன் கிரான்ட் டூரிஷ்மோ என்ற கான்செப்ட் காரையும் சவூதி இளவரசர் வாங்கியிருக்கிறார். இரண்டுமே ஒன் ஆஃப் ஒன் என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு கார் மாடலாக உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கான்செப்ட்
புகாட்டி சிரோன் காரை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட விஷன் கிரான்ட் டூரிஷ்மோ என்ற மாதிரி மாடல் கார் கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான், புதிய புகாட்டி சிரோன் கார் வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிரோன் அறிமுகம்
புகாட்டி சிரோன் காரின் புரோட்டோடைப் மாடல் கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த மோட்டார் ஷோவில் வைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவை இரண்டும்தான் தற்போது சவூதி இளவரசர் கைவசம் வந்துள்ளது.
விலை
விஷன் கிரான் டூரிஷ்மோ மற்றும் புகாட்டி சிரோன் காரின் புரோட்டோடைப் மாடல் என இரண்டையும் சேர்த்து 5 மில்லியன் டாலர்களை கொடுத்து சவூதி இளவரசர் வாங்கியிருக்கிறாராம். இந்திய மதிப்பில் ரூ.33 கோடி விலையில் கைவசப்படுத்தியிருக்கிறாராம் சவூதி இளவரசர். சாதாரணமாக புகாட்டி சிரோன் கார் இந்திய மதிப்பில் ரூ.17.82 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
மகிழ்ச்சி
இந்த இரண்டு கார்களையும் வாங்கியிருப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் சவூதி இளவரசர் தகவல் தெரிவித்து, படங்களையும் போட்டிருக்கிறார். இந்த படங்களை பிரபல புகைப்பட கலைஞர் ஜிஎஃப் வில்லியம்ஸ் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி
இந்த இரண்டு கார்களையும் தவிர்த்துதான் 500 புகாட்டி சிரோன் கார்கள் உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டது. மேலும், புகாட்டி சிரோன் காரை டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கிவிட்டன. சில அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் ஏற்கனவே டெலிவிரி பெற்றுவிட்டனர்.
தரிசனம்
சவூதி இளவரசர் வாங்கியிருக்கும் விஷன் கிரான் டூரிஷ்மோ கான்செப்ட் காரும், புகாட்டி சிரோன் காரின் முதல் புரோட்டோடைப் காரும் வரும் 21ந் தேதி பெபுள் பீச் கார் கண்காட்சி திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.
சிறப்பம்சங்கள்
இரண்டு கார்களுமே நீல வண்ணப் பூச்சு கொண்டவை. காட்சிக்கு வைக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த இரண்டு கார்களிலுமே 8.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 1480 எச்பி பவரையும், 1,599 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது.
வேகம்
வெறும் 2.5 வினாடிகளில் ஆரம்ப நிலையிலிருந்து 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பதுடன், மணிக்கு 420 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டது. அதாவது, காரின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும்.
கலெக்ஷன்
இதுகுறித்து புகாட்டி நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதுடன், இரண்டு கார்களும் சவூதி இளவரசரின் கார் கலெக்ஷனில் முக்கிய மாடல்களாக இடம்பெறும் என்றும் கூறியிருக்கிறது. புகாட்டி சிரோன் காரின் புரோட்டோடைப் மாடல் இதுவரை ஓட்டப்பட்டுள்ளதா, அது எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply