திரையில் தோன்றும் கீ போர்ட்

Loading...

திரையில் தோன்றும் கீ போர்ட்விண்டோஸ் இயக்கத்தில், திரையில் நம் பயன்பாட்டிற்கென ஒரு கீ போர்ட் தரப்படுகிறது. கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் கீ போர்ட் நமக்கு இல்லை என்றாலும், இதனை நாம் பயன்படுத்த முடியும். குறிப்பாக, இப்போது வரும் தொடு உணர் திரை எனப்படும் ‘டச் ஸ்கிரீன்’ திரையில் இதன் பயன்பாடு அதிக வசதிகளைத் தருகிறது. இதனை மவுஸ் மூலம் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 சிஸ்டங்களில், இரண்டு வகையான கீ போர்ட் தரப்படுகிறது. இவை: basic touch keyboard மற்றும் advanced on-screen keyboard. இரண்டாவது கீ போர்டினை Ease of Access செட்டிங்ஸ் அமைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டினையும் எப்படி பெற்றுப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

விண்டோஸ் 10: டாஸ்க்பாரிலிருந்து விரைவாக, இந்த கீ போர்டினை அணுக, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “Show touch keyboard button” என்ற விருப்பத்தினை இயக்கி வைக்கவும். இயக்கி வைத்தவுடன், சிஸ்டம் ட்ரேயில், கீ போர்ட் ஐகான் ஒன்றினைப் பார்க்கலாம். சிஸ்டம் ட்ரேயில் இல்லை என்றால், நோட்டிபிகேஷன் ஏரியாவில் காணலாம். இதில் கிளிக் செய்தாலோ அல்லது விரலால் தொட்டாலோ, உடன் திரையில் ‘ஆன் ஸ்கிரீன் கீ போர்ட்’ காட்சி அளிக்கும். கீகளைக் கிளிக் செய்து அல்லது தொட்டு இயக்கலாம். இதன் மூலம், வழக்கமாக நாம் எப்படி கம்ப்யூட்டருக்குக் கட்டளைகளை அனுப்புகிறோமோ, அதே போல கட்டளைகளை அமைத்து இயக்கலாம். டெக்ஸ்ட் அமைக்கலாம். தொடு திரை என்றால், உங்கள் விரலே ”பேனாவாக” இங்கு மாறும். வலது மேல் பக்கத்தில் உள்ள ஐகான்கள் கீ போர்டினை நகர்த்தவும், அதனைப் பெரிதாக்கவும் உதவும். இந்த கீ போர்டின் அடிப்பாகத்தில் உள்ள கீ போர்ட் பட்டன்களை இயக்குவதன் மூலம், கீ போர்டின் வெவ்வேறு வடிவமைப்புகளுக்கு மாறிக் கொள்ளலாம்.

கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட இன்னொரு கீ போர்டும் இந்த சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனை, விண்டோஸ் 10 சிஸ்டம் கொண்டிருக்கும் Ease of Access settings மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனைப் பெற, ஸ்டார்ட் மெனு திறந்து, “Settings.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Ease of Access > Keyboard எனச் சென்று, விண்டோவின் மேலாகக் கிடைக்கும் “On-Screen Keyboard” என்ற ஆப்ஷனை இயக்கவும்.

இதில் கூடுதலாகச் சில கீகள் தரப்படும். வழக்கமாக, நாம் இணைத்துச் செயல்படுத்தும் கீ போர்ட் போல இதில் பல கீகள் கிடைக்கும். வழக்கமான டெஸ்க் டாப் விண்டோ போல இதன் தோற்றம் இருக்கும். இதன் அளவினை மாற்றி அமைக்கலாம். இதனைத் தொடு உணர் கீ போர்டுடன் ஒப்பிடுகையில், பல வேறுபாடுகள் இருப்பதனைக் காணலாம். கீ போர்டுக்கு வலது கீழாக மூலையில் தரப்பட்டுள்ள “Options” பட்டனை அழுத்தினால், கூடுதல் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பதனைக் காணலாம். இதனை டாஸ்க் பாரில் பின் செய்தும் வைக்கலாம். அதன் மூலம், மீண்டும், எப்போது வேண்டுமானாலும் இதனை இயக்கிப் பயன்படுத்தலாம்.

இந்த கீ போர்டினை, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இயக்கி, உள் நுழைந்திடும் (sign-in) திரையிலும் பெறலாம். இந்த உள் நுழைதல் திரையின் கீழ் வலது மூலையில் “Ease of Access” பட்டன் ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் மெனுவில் “On-Screen Keyboard” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

விண்டோஸ் 8/8.1: விண்டோஸ் 8 மற்றும் விண் 8.1 சிஸ்டங்களிலும், ஏறத்தாழ, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மேற்கொண்ட செயல்பாடுகளின் மூலமாகவே, திரையில் இயங்கும் கீ போர்டினைப் பெறலாம். சின்ன சின்ன வேறுபாடுகள் உண்டு. அவற்றை இங்கு பார்க்கலாம். இதனைப் பெற டூல் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் “Toolbars,” தேர்ந்தெடுத்து, அதில் “Touch Keyboard” என்பதை, டிக் அமைத்து, இயக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு வரவும்.

இதனை மேற்கொண்டால், நம் சிஸ்டம் ட்ரேயில் அல்லது நோட்டிபிகேஷன் ஏரியாவில், டச் கீ போர்ட் ஐகான் கிடைக்கும். இதனைத் தொட்டு அல்லது கிளிக் செய்து, திரைக்கான கீ போர்டினைப் பெறலாம்.
வழக்கமான ஆன் ஸ்கிரீன் கீ போர்டினையும், இந்த சிஸ்டங்களில் பெறலாம். இதற்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், ஸ்டார்ட் பட்டனில், ரைட் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் சிஸ்டம் 8 எனில், திரையில், கீழாக இடது மூலையில் கிளிக் செய்திட வேண்டும். தொடர்ந்து, “Control Panel” கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில், தொடர்ந்து “Ease of Access,” >> “Ease of Access Center,” >> “Start On-Screen Keyboard” என்று செல்லவும். கீ போர்டினை, டாஸ்க் பாரில் ‘பின்’ செய்தும் வைத்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், உள் நுழைதல் திரை வழியாகவும், ஆன் ஸ்கிரீன் கீ போர்டினைப் பெறலாம். இந்த திரை விண்டோவில், கீழாக இடது மூலையில் கிடைக்கும் “Ease of Access” ஐகானில் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் மெனுவில், “On-Screen Keyboard” என்பதில் கிளிக் செய்திட்டால், கீ போர்ட் திரையில் காட்டப்படும்.

விண்டோஸ் 7: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குவதாக இருந்தால், Start பட்டனில் கிளிக் செய்து, “All Programs” தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், Accessories > Ease of Access > On-Screen Keyboard எனச் செல்லவும்.
கண்ட்ரோல் பேனல் பிரிவிலும் இது கிடைக்கும். அந்த பிரிவு சென்று, அதன் Ease of Access Center பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் “Start On-Screen Keyboard” என்ற பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் கிடைக்கும். மிக எளிதாக இதனைத் தொடர்ந்து பெற, இந்த புரோகிராமினை, டாஸ்க் பாரில் ‘பின்’ செய்து வைக்கலாம். இது விண்டோஸ் 8 மற்றும் விண் 10 சிஸ்டங்களில் கிடைத்த திரை கீ போர்ட் போல தோற்றத்தில் இல்லாவிட்டாலும், செயல்பாட்டில் ஒரே மாதிரியாகவே செயல்படும்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ‘உள் நுழைதல்’ திரை வழி, ஆன் ஸ்கிரீன் கீ போர்டினைப் பயன்படுத்த, அத்திரையில், இடது கீழ் புறம் உள்ள “Ease of Access” பட்டனில் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் பட்டியலில், “Type without the keyboard (On-Screen Keyboard)” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

திரையில் தோன்றும் கீ போர்ட், டைப் செய்து டெக்ஸ்ட் அமைக்க மட்டும் எனப் பல பயனாளர்கள் எண்ணுகின்றனர். வழக்கமான கீ போர்ட் ஷார்ட் கட் கீ தொகுப்பின் செயல்பாடுகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம். வழக்கமாக, இணைத்துச் செயல்படுத்தும் கீ போர்ட் வழியாக மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளையும், இதன் வழியாகவும் மேற்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply