உடல் சொல்லும் நோய் அறிகுறிகள்

Loading...

உடல் சொல்லும் நோய் அறிகுறிகள்நம் உடம்பு நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கின்றது. நாம் நன்றாக இருக்கின்றோமா அல்லது பிரச்சினை இருக்கிறதா என்று எச்சரிக்கை செய்து கொண்டு தான் இருக்கின்றது. ஆரம்ப காலத்திலேயே இதனை கவனித்தால் நம் உடலை பாதுகாக்க சவுகர்யமாக இருக்கும். தவறுவதன் காரணமே அநேக பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வெடித்த, வறண்ட, சுரசுரப்பான குதிகால் அநேகருக்கு வலி கொடுக்கலாம். இரத்த கசிவு ஏற்படலாம். வீக்கம் தரலாம். நடக்கக்கூட கஷ்டமாக இருக்கலாம். இது வைட்டமின் ஏ சத்து குறைவினால் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மருத்துவ ஆலோசனைப்படி வைட்டமின் ‘ஏ’ எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வைட்டமின் ஏ எடுத்துக்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். குறுகிய காலத்திற்கே மருத்துவர் இதனை சிபாரிசு செய்வர். கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனைப்படியே எதனையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சோற்றுக்கற்றாழையில் ஆன ஜெல் தடவுவது நல்ல நிவாரணம் தரும்.

மஞ்சள் நிற சருமம் என்பது சற்று அதிக பாதிப்பினை காட்டும் அதுபோல கல்லீரல், கணையம், பித்தப்பை இவற்றின் பாதிப்பினை கூறுகிறது. முதியோர்களுக்கு மிக லேசான சருமத்தில் மஞ்சள் நிறமாறுபாடு ஏற்படலாம். வைட்டமின் பி12 பற்றாக்குறை காரணமாக இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கும் சைவ உணவு உண்பவர்களுக்கும் வைட்டமின் பி12 தேவை. மருத்துவ ஆலோசனையுடன் இதனை எடுத்துக்கொள்வது அவசியம்.

பலமில்லாத எளிதில் ஒடியும் நகம் ஒருவரின் சத்துணவு குறைவினை குறிப்பாக புரதக்குறைவினை காட்டுவதாகும். இதற்கு நல்ல புரதம், முட்டை வெள்ளை, பருப்பு வகைகள், மீன் இவை தீர்வு தரும். நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் உடலில் ஸிங்க் சத்து குறைவினை காட்டும். இதனை மருத்துவ ஆலோசனைபடி ‘ஸிங்க்‘ எடுத்துக்கொள்ளலாம். இதிலும் சரியாக வில்லை என்றால் ஜீரணக்கோளாறு, என்ஸைம் கோளாறு இருக்கின்றதா என பரிசோதித்து கொள்ள வேண்டும்.

நாக்கு எரிகின்றது, உதடுகள் எரிகின்றது, வாய் எரிகின்றது என்று சொல்கிறார்களா? முதலில் அவர்கள் கரகரவென தரையை பிரஷ் போட்டு தேய்ப்பது போல் பல்லையும் நாக்கையும் சுத்தம் என்ற பெயரில் முரட்டுத்தனமாக தேய்க்கின்றார்களா என்பதனை கண்டறியுங்கள். சரியில்லாத பொருந்தாத பல்செட் வைத்திருக்கின்றார்களா என்று பாருங்கள்.

இவையெல்லாம் சரியாக இருந்தால் அவர்களுக்கு இரும்பு, ஸிங்க், பிகாம்ளெக்ஸ் குறைபாடு இருக்கலாம். ரத்த பரிசோதனை செய்து இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும். மேலும் ஸிங்க், பிகாம்ளெக்ஸ் இதனையும் மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பினாலும் இந்த வாய் எரிச்சல் ஏற்படலாம். தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு இத்தகு குறைபாடுகள் ஏற்படும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண் கீழே உள்ள கருவளையம் சரிவர தூக்கமின்மையைக் குறிக்கும். சில உணவு வகைகளின் ஒவ்வாமையினாலும் இவ்வாறு ஏற்படக் கூடும். பொதுவில் பால், கோதுமை, முட்டை, புளிப்பு, சோளம் இவைகளைத்தான் முதலில் ஒவ்வாமைக்கான பரிசோதிப்பது உண்டு. நீங்கள் இதில் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் ஒன்றினை ஒருவாரம் தவிர்த்துப் பாருங்கள். அதிலேயே உங்களுக்குத் தெரிந்து விடும். ஆனால் இப்படி மேற்கூறிய வற்றினை ஒன்றொன்றாக தவிர்த்து ஆய்வு செய்தும் எந்த மாற்றமும் இல்லையெனில் மருத்துவ ஆலோசனையும் பெறுக

ஒரு உணவின் ஒவ்வாமையினை கண்டு பிடித்து சிறிது நாள் கழித்து அதனைக் சேர்த்துக்கொள்ளும் பொழுது மீண்டும் இதே பிரச்சினை ஏற்பட்டால் அதனை எப்போதும் தவிர்த்து விடுங்கள். தலை முடி கொட்டுதல் பிரச்சினை காரணங்கள் பல உள்ளன என்றாலும் மருத்துவ ரீதியாக தைராய்டு பிரச்சனை, இரும்பு சத்து குறைவு, புரத குறைபாடு, கிருமி தாக்குதல் போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

மேலும் புற்று நோய் சிகிச்சை, கருத்தடை மாத்திரைகள் சில மனநல மாத்திரைகள், இரத்தக்கொதிப்பு மருந்துகள் மூட்டுவலி மருந்துகள், அதிக சூடு இவையும் முடிகொட்டுவதற்கு காரணமாகின்றன. பரம்பரையும் முக்கிய காரணமாகின்றது 50 வயதினைத் தாண்டும் பாதி ஆண்களும் கால்வாசி பெண்களும் அதிக தலை முடியினை இழந்து விடுகின்றனர். பெண்களுக்கு முடி மெலிந்து விடுகின்றது.

தலைமுடி கொட்டினால் முதலில் உணவில் நல்லபுரதம் இருக்கும் படி உண்ணுங்கள். மேலே கூறப்பட்டுள்ள மருத்துவ காரணங்களையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள். இது தவிர தலைமுடிக்கு உரிய கவனமான மஸாஜ், எண்ணெய், பராமரிப்பு இவற்றினை அளியுங்கள்.


காதில் இரைச்சல்:
காதில் பல விதமான சத்தங்கள் கேட்பதாக சொல்லுவார்கள். இது சாதாரணமாக காணப்படும் பிரச்சனைதான். சிலருக்கு இது ஒருசில நிமிடங்களில் போய்விடும். சிலருக்கு இது அடிக்கடி தொந்தரவினைக்கொடுக்கும். இதற்கு பொதுவான காரணம் அதிக சத்தத்தின் சூழ்நிலையில் இருப்பது ஆகும். மேலும் காதில் அழுக்கு சேருதல் குறிப்பிட்ட சில வகை மருந்துகள் இவையும் காரணமாகின்றன. நரம்பு பாதிப்பினாலும் இவ்வாறு ஏற்படலாம். இரத்த குழாய் சுருக்கம், இரத்த சோகை, சர்க்கரை நோய், வைட்டமின் பி12 சத்து குறைபாடு ஆகியவையும் காரணமாக இருக்கலாம். காது மருத்துவரை சந்திக்கவும்.


கீழ் முதுகுவலி:
இதற்கு பல காரணங்களைக் கூற முடியும். முட்டுவலி பிரச்சனை, தண்டு வட பாதிப்பு, சிறுநீரகக் கற்கள் என பல காரணங்களைக் கூறலாம். நீங்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்கா விட்டால் கூட முதுகு வலி இருக்கும். தண்டு வடத்தின் குஷன் போன்ற அமைப்பு நீரின் அளவினைப் பொறுத்தே அமையும்.

அதிக அழுத்தம் தண்டு வடத்தில் ஏற்படும் பொழுது அங்கு வெற்றிடம் ஏற்படும். மீண்டும் நீர் சத்து உள்ளே செல்லும். அப்பொழுது உடலில் நல்ல நீர் சத்து தேவை. அதுவே முதுகுத் தண்டினை பல பாதிப்புகளிலிருந்து காப்பாற்றும். ஆனால் முதுகு வலிக்கு பல காரணங்கள் இருக்கும் என குறிப்பிட்டுள்ளதால் முறையான மருத்துவ பரிசோதனை அவசியமே.

சிலருக்கு திடீரென எழுதும் பொழுது எழுத்து பெரிதாய் ஆரம்பித்து போகப்போக சிறு எழுத்துக்களாக மாறி வரும். காலில், விரல்களில் ஒரு நடுக்கம் போன்று இருக்கும். இது நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்ஸன் எனப்படும் நரம்பு பாதிப்பு நோயின் ஆரம்பகால அறிகுறியாகும். மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தாக்குதல் இது. ஆரம்ப கால கவனிப்பால் இன்றைய மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நல்ல சிகிச்சையினை அளிக்க முடியும்.

திடீர் திடீர் என கோபம் வெடிக்கின்றதா? ஏன் இப்படி நடந்து கொள்கின்றோம் என்று பிறகு வருத்தப்படுகின்றீர்களா? இது மனதிற்குள் அடக்கிய ஏதோ ஒரு மன உளைச்சல் காரணமாக இருக்கக் கூடும். அதை அப்படியே விட்டு விட்டால் உடல் பாதிப்பு ஏற்படும். எனவே காரணத்தினை கண்டறிந்து நிவர்த்தி தேடுங்கள்.


பல்பாதிப்பு:
நிறைய பேருக்கு பல்லில் திடீரென எனாமல் தேய்ந்து விட்டது என பல் டாக்டர் கூறுவதினை கேட்டு வருந்துவர். இவர்களுக்கு பல் கூச்சம், குளிர்ந்த சூடான பானங்களை குடிக்க இயலாமை ஆகியவை ஏற்படும். இதற்கு காரணம் இவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் ‘ஆசிட்’ அதாவது நெஞ்செரிச்சல் காரணமாக இருக்கும்.

பலருக்கு இந்த நெஞ்செரிச்சல் பாதிப்பை உணர முடியும். அதற்கான சிகிச்சையினையும், உணவு மாற்றத்தினையும் எடுத்துக் கொள்வர். சிலர் இந்த ஆசிட் பாதிப்பினை உணராது இருப்பர். இரவில் இவர்கள் படுக்கும் பொழுது இந்த ஆசிட் உணவுக்குழாய் வழியாக மேலேறி வாயின் உட்புறம் அதாவது பற்களின் உட்புறத்தினை இந்த ஆசிட் அரித்து விடும். பற்களில் எனாமல் தேய்ந்து விட்டது என்றால் முதலில் உங்கள் குடலினை கவனியுங்கள்.

அதிக குறட்டை, வீங்கிய ஈறுகள் இவை இருதய நோய் பாதிப்பின் அறிகுறியா என பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
பெயர்களை மறப்பது மறதி நோயின் அறிகுறியாய் இருக்கக்கூடும். என்றாலும் தைராய்டு ஹார்மோன் குறைவினாலும் இவ்வாறு ஏற்படலாம். ஒரு ரத்த பரிசோதனை சிகிச்சையினை எளிதாக்கி விடும்.

பலருக்கு பரம்பரை பரம்பரையாக அவர்கள் குடும்பத்தில் ரத்தக் கொதிப்பு பாதிப்பு இருக்கலாம். அவர்கள் கண்டிப்பாய் அடிக்கடி ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்து கொள்வது அவசியமே. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம் சில சமயங்களில் எந்த அறிகுறியும் காட்டாது இருக்கலாம். மேலும் இவர்கள் எடை கூடுதலாக இருப்பவராக இருந்தால் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டியது. மிக மிக அவசியம்.

அடிக்கடி சீறுநீர் செல்கிறதா? முதலில் ரத்தத்தில் உங்கள் சர்க்கரை அளவினை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அடிக்கடி உங்களை அறியாமலேயே நகத்தை கடிக்கின்றீர்களா? கால்சியம், தாது உப்புகள் தேவையான அளவு உங்கள் ரத்தத்தில் இருக்கிறதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் சொல்லும் அறிகுறிகளை உடனுக்குடன் கவனித்தால் நோய்கள் தாக்குதலில் இருந்து மிக எளிதில் நிவாரணம் பெற்று விடலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply