நடிகை திரிஷாவின் அழகின் ரகசியம் தெரிஞ்சுக்கனுமா

Loading...

நடிகை திரிஷாவின் அழகின் ரகசியம் தெரிஞ்சுக்கனுமாஎந்தவொரு அதிசய மருந்தையும்விட, நம்பிக்கையோடு செய்யப்படும் உறுதியான உடற்பயிற்சியே உங்கள் எடையை குறைக்கும்! – பேட்ரீசியா நீல் (அமெரிக்க நடிகை)

அம்மாவும் மகளும்தான்… ஆனாலும், அத்தனை சீக்கிரத்தில் ஒப்புக்கொள்ள மறுக்கிறது மனசு. யெஸ்… த்ரிஷாவையும் அவரது அம்மா உமாவையும் சேர்த்துப் பார்க்கிற யாருக்கும் அவர்களை அக்கா-தங்கையாகவே நினைக்கத் தோன்றும். த்ரிஷா என்கிற நடிகை அழகாக, இளமையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் நடிகையின் அம்மா அப்படி இருப்பதில்தான் வியப்பு!

‘‘த்ரிஷா நடிக்க வந்தப்புறம்தான் எல்லாரும் என்னைப் பார்த்திருப்பாங்க. ‘நடிகையோட அம்மாவாச்சே… அதான் அப்படி இருக்காங்க’ன்னும் சொல்வாங்க. ஆனா, எங்க வீட்ல எல்லாருமே ஃபிட்னஸ் பிரியர்கள். த்ரிஷா நடிக்க வர்றதுக்கு முன்னாடியும் நாங்க அப்படித்தான். ஜிம் போகறது, வாக்கிங், யோகான்னு எனக்கு தினமும் ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி அவசியம்…’’
– இளமைப் பின்னணியின் ரகசியத்துடன் பேச ஆரம்பிக்கிறார் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன்.

‘‘முறையான உடற்பயிற்சியும் சரியான உணவுப் பழக்கமும் இருந்தா, இளமையும் அழகும் ஆரோக்கியமும் எப்போதும் நம்ம கூடவே இருக்கும். அதை அனுபவத்துல உணர்ந்து சொல்றேன். எங்கக் குடும்பமே டயட் சாப்பாட்டுக்கு மாறி, பல வருஷங்கள் ஆச்சு. யாருமே சாதம் அதிகம் எடுத்துக்க மாட்டோம். அதிக எண்ணெய், மசாலா, கிழங்கு வகையறாக்கள் இருக்காது. கொழுப்பு நீக்கின ஸ்கிம்டு மில்க்தான் உபயோகிப்பேன். காலை சாப்பாட்டுக்கு இட்லி, தோசை, பிரெட் ஆம்லெட், டோஸ்ட்னு வழக்கமான அயிட்டங்கள்தான். ஆனாலும் எண்ணெயோ, நெய்யோ இருக்காது. ஒவ்வொரு வேளை சாப்பாடு எடுக்கும் போதும், ஒரு டம்ளர் ஜூஸ் குடிக்கிறது வழக்கம். எண்ணெய் இல்லாம சமைக்கிற பாத்திரங்கள்லதான் சமைப்பேன். எண்ணெய் தேவைப்படற இடங்கள்ல ஆலிவ் ஆயில் உபயோகிப்போம். ‘லைட் வெர்ஜின் ஆலிவ் ஆயில்’னு கிடைக்குது. என்னதான் காஸ்ட்லியான எண்ணெயானாலும், கொழுப்பு இல்லாம இருக்காது. கெட்ட கொழுப்பு அதிகமா உள்ள மற்ற எண்ணெய்களைவிட, உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ள ஆலிவ் ஆயில் ரொம்ப பெஸ்ட்.

ஜிம்ல எனக்கு தினம் ஒன்றரை மணி நேரமாவது எக்சர்சைஸ் பண்ணணும். கார்டியோ, டிரெட்மில்னு எல்லாம் கலந்ததா இருக்கும். எப்பவாவது நேரம் கிடைக்கிறப்ப ஸ்விம்மிங். எப்பவுமே தனியா எக்சர்சைஸ் பண்றதைவிட, ஜிம்ல சேர்ந்து பண்றது பெட்டர். அப்படிப் பண்ற போது, மத்தவங்களைப் பார்த்து நமக்கு ஒரு உற்சாகமும் உத்வேகமும் வரும். முன்னல்லாம் நானும் த்ரிஷாவும் சேர்ந்து வாக்கிங் போவோம். இப்ப த்ரிஷா சென்னைல இருக்கிறதே அபூர்வமாயிடுச்சு. எப்பவாவது த்ரிஷா சென்னைல இருந்தா, ஒரு சேஞ்சுக்காக ரெண்டு பேரும் சேர்ந்து வாக் போவோம். அந்த அனுபவம் ரொம்ப நல்லாருக்கும்!’’

அழகான அம்மா சொல்* நிறுத்த, பேரழகு மகள் தொடர்கிறார்.

‘‘என்னோட இந்த அழகான ஸ்கின், கலர், தலைமுடி எல்லாம் எங்கம்மா கொடுத்த சொத்து. இயல்பாவே எல்லாம் எனக்கு நல்லா அமைஞ்சிருச்சு. அதைத் தக்க வச்சுக்க நான் நிறைய மெனக்கெடுவேன். காபி, டீயை விட்டு பல வருஷங்களாச்சு. என்னோட சாய்ஸ், எங்கேயும் எப்போதும் கிரீன் டீதான். கிரீன் டீ குடிக்கிறதுக்காகவே மெகா சைஸ்ல கப் வச்சிருக்கேன். ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவையாவது கிரீன் டீ குடிப்பேன். வயிறு முட்ட விருந்தே சாப்பிட்டாலும், அதுக்கப்புறம் ஒரு பெரிய கப் கிரீன் டீ குடிச்சா, உடம்பு அத்தனை லேசாயிடும்.

அடுத்து எங்கம்மா சொன்ன மாதிரி ஆலிவ் ஆயில் மேஜிக். பொரியல், சாலட்னு எல்லாத்துக்கும் எனக்கு ஆலிவ் ஆயில்தான் வேணும். பார்ட்டி, கெட் டுகெதர் எல்லாம் எங்க வாழ்க்கைல தவிர்க்க முடியாத விஷயங்கள். போகாம இருக்க முடியாது. போற இடத்துல சாப்பாட்டு செக்ஷன் பக்கமே திரும்ப மாட்டேன். கொஞ்சம் சூப்… இல்லைன்னா சாலட் மட்டும் எடுத்துப்பேன். இல்லைன்னாலும் ஒரே பிளேட்ல வச்சு எல்லா ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து சாப்பிடுவோம். ரொம்ப முக்கியமான விசேஷம், கல்யாணம்னு வந்தா, பாயசத்துலேருந்து ஐஸ்கிரீம் வரைக்கும் ஒரு பிடி பிடிக்காம விட மாட்டேன். அடுத்த நாளே அதை ஈடுகட்ட இன்னும் கூடுதலா எக்சர்சைஸ் பண்ணிடுவேன்.

ஜிம்ல பணம் கட்டி, நாள் தவறாம போறதெல்லாம் எனக்குச் சரியா வராது. அதனால, சென்னைல இருக்கிறப்ப, யோகா டீச்சரை வீட்டுக்கு வரவழைச்சு யோகா பண்ணுவேன். நான் பண்றது பவர் யோகா. சாதாரண யோகால வெறும் ஆசனங்கள்தான் இருக்கும். ‘பவர் யோகா’ங்கிறது வேகமா பண்றது. இதயத்துக்கான பயிற்சிகளும் சேர்ந்திருக்கும். அதுக்கேத்தபடி ரிசல்ட்டும் நல்லா இருக்கும்.
எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒர்க் அவுட்னா ஸ்விம்மிங். நேரம், காலம் பார்க்காம ஸ்விம் பண்ணிட்டே இருப்பேன். சென்னைல ஸ்விம் பண்றதுக்கான சரியான இடம் இல்லை. வெளிநாட்ல இருந்தா, இன்டோர்ல ஸ்விம்மிங் பூல் இருக்கான்னு தேடிப் போய் பண்ணுவேன். அதுல உள்ள தண்ணீர் எப்படி இருக்கு, குளோரின் கலந்திருக்கான்னு ஒரு ரிசர்ச்சே பண்ணிட்டுதான் தண்ணிக்குள்ளயே இறங்குவேன். தண்ணீர் சரியில்லாட்டா, நம்ம ஸ்கின், கண்கள்னு எல்லாம் பாதிக்கப்படும்…’’ – ஃபிட்னஸ் டிப்ஸ் சொல்* முடிக்கிற த்ரிஷாவிடம் அழகுக் குறிப்பு கேட்காமல் விடலாமோ?
‘‘நிறைய தண்ணீரும், சாத்துக்குடி, வாட்டர் மெலன், மாதுளைன்னு நிறைய நிறைய ஜூஸ்களும் குடிச்சுப் பழகணும். ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னாடி, என்னதான் டயர்டா இருந்தாலும், ஸ்கின்ல உள்ள மேக்கப்பை எடுத்துட்டு, நைட் கிரீம் போட்டுக்கிட்டு தூங்கணும். எல்லாத்தையும் விட முக்கியமா மனசை பத்திரமா பார்த்துக்கணும். அது அழகா இருந்தா, எல்லாம் அழகாகும்!’’சிம்பிளாக சொல்கிறார் ஸ்வீட்டி!


ரகசிய மாத்திரை!

சில எடை குறைப்பு நிலையங்களில் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆலோசனையோடு, சில மாத்திரைகளும் வழங்குகிறார்கள். அவர்களுக்கு சராசரியாக 3 கிலோ எடை சரசரவென குறைகிறது. பெரிய அளவில் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கும் இப்படி எடை குறைந்தது. ஆனால், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிய பின்விளைவுகள் ஏற்பட்டன. இதன் பின்னணியை ஆராய்ந்ததில் அதிர்ச்சியான சில உண்மைகள்…

வாடிக்கையாளர்களின் எடையை குறிப்பிட்ட காலத்துக்குள் குறைத்துக் காட்டுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள் அவர்கள். எடைக்குறைப்புக்கு அடிப்படையான டயட், எக்சர்சைஸை சிலர் முறையாக பின்பற்றாமல் போகலாம். அதுவும் அவை இரண்டும் தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட வேண்டியவை. அதனால், ‘காதை சுத்தி மூக்கைத் தொடுவானேன்’ என குறுக்கு வழியில் சிந்தித்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் அந்த மாத்திரைகள்!

நீரிழிவுகாரர்களுக்கு அளிக்கப்படும் குறிப்பிட்ட சில மாத்திரைகளை அவர்கள் துரிதமான எடை குறைப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது அறிவியல் பூர்வமானதும் அல்ல… சட்ட ரீதியானதும் அல்ல… இம்மாத்திரைகளை நீரிழிவு இல்லாதவர்கள் உட்கொள்ளும்போது இதய பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

உங்கள் ஜிம்மிலோ, எடை குறைப்பு நிலையத்திலோ மாத்திரைகள் வழங்கினால், கண்ணை மூடிக்கொண்டு விழுங்கிவிட வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மாத்திரை எடுத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை வரும்… கவனம்!


நெசமாத்தான் சொல்றீங்களா?

‘சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், உணவின் அளவு குறையும் என்கிறார்களே… உண்மையா? போதுமான அளவு தண்ணீர் பருகுவது மிக முக்கியமே… ஆனால், இது எந்த விதத்திலும் பசியை அடக்குவதில்லை. இது பற்றி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவு சமீபத்தில் வெளியாகியுள்ளது. தண்ணீர் அமுதம் போல செயல்பட்டு, வயிற்றுக்கு முழுமைத்தன்மையையும், மனதுக்குத் திருப்தியையும் அளிக்குமா என பல காலம் ஆராய்ந்தார்கள். சாப்பிடும் முன்போ, சாப்பிடும் போதோ தண்ணீர் எடுத்துக்கொள்வதால், உட்கொள்ளும் உணவின் அளவு எந்த விதத்திலும் குறையவில்லை என்பதே ரிசல்ட்!

ஆனால், ஒரே ஒரு ஆறுதலும் உண்டு. நீர் அதிகம் நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, திட உணவின் அளவு குறையுமாம். உதாரணம் – காய்கறி சூப்!


வேலை வேலை வேலையா?

அரை மணி நேரம் வாக்கிங் செல்ல முடியாத அளவு பணிச்சுமை உங்களை அழுத்துகிறதா? கவலை வேண்டாம்!

* பத்து பத்து நிமிடங்களாக சிறுசிறு இடைவேளைகள் எடுத்துக்கொண்டு குட்டியாக ‘வாக்’ செல்லுங்கள்.

* இருக்கையில் அமர்ந்தவாறே செய்யக்கூடிய சிறிய உடற்பயிற்சிகளை மணிக்கு ஒருமுறையாவது செய்யுங்கள்.

* அலுவலகத்தில் ஒருபோதும் லிஃப்ட் பயன் படுத்தாதீர்கள்.

* தண்ணீர், தேனீர் போன்றவற்றை இருக்கைக்குக் கொண்டு வரச் சொல்லாமல், எழுந்து சென்று பருகி வாருங்கள்.

* முறையாக சுவாசப்பயிற்சி கற்றுக்கொண்டு, இருக்கும் இடத்திலேயே செய்தாலே போதும்… மன அழுத்தமும் குறையும்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply