50 கோடி பயனாளர்களைப் பெற்றது வாட்ஸ் அப்

Loading...

50 கோடி பயனாளர்களைப் பெற்றது வாட்ஸ் அப்பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், வாட்ஸ் அப் நிறுவனத்தினை, சென்ற பிப்ரவரி மாதம் 1,900 கோடி டாலர் கொடுத்து, தன் வசப்படுத்திய போது, அவர் இலக்கும் இலட்சியமும் அவரிடம் தெளிவாக இருந்தது. வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கையை, பன்னாட்டளவில் நூறு கோடியாக உயர்த்த வேண்டும் என தன் ஆசையை வெளியிட்டார்.

அது நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. சென்ற மாதம், வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. வாட்ஸ் அப் நிறுவப்பட்டு, ஐந்தே ஆண்டுகளில் இந்த எண்ணிக் கையை எட்டியுள்ளது ஆச்சரியப்படுத்தக்க விஷயமாகும். மேலும் ஒவ்வொரு மாதமும் 2 கோடியே 50 லட்சம் பேர், இதில் புதிய பயனாளர்களாகச் சேர்ந்து வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த 50 கோடி பேரும், தங்களுக்குள்ளாக 70 கோடி படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 10 கோடி விடியோ படங்கள் பதிக்கப்படுகின்றன. முன்பு நாளொன்றுக்கு 6,400 கோடி தகவல் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தற்போது இது இன்னும் அதிகரித்து வருகிறது.

இந்த 50 கோடி பயனாளர்களில், 4 கோடியே 80 லட்சம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர். உயர்ந்த எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்ட ஒரே தனி நாடு என இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக, பிரேசில் நாட்டில் 4.5 கோடி பேர் இயங்குகின்றனர். ஒரே நாளில், வாட்ஸ் அப் மூலம், 6,400 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்று சென்ற ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

பயனாளர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியதை, உலக மக்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதாக, வாட்ஸ் அப் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கௌம் தெரிவித்துள்ளார். இந்த அளவிற்கு வேகமாக இதன் பயனாளர்கள் அதிகரிக்க முதன்மை காரணம், ஆண்ட்ராய்ட் இயக்கமும் ஸ்மார்ட் போன்களுமே எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை கம்ப்யூட்டரையும், இணையத்தையும் பயன்படுத்தாத பலர், இந்த போன்களின் மூலம் வாட்ஸ் அப் இன்ஸ்டண்ட் மெசஞ்சரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கையும் வாட்ஸ் அப் புரோகிராமினையும் இணைக்கும் வேலை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியுள்ள நிலையில், இரண்டின் இணைப்பு, அதனை உலகில் மிகப் பெரும் தகவல் பரிமாறிக் கொள்ளும் கோட்டையாக அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், வாட்ஸ் அப் தன் புரோகிராமினை எந்த வகையிலும் பணம் சம்பாதிக்கும் வழிகளுக்கு உட்படுத்தவில்லை. விளம்பரம் எதுவும் இதில் இல்லை. தற்போதைக்கு பயனாளர்களின் இனிமையான அனுபவத்திற்கு மட்டும் முதலிடம் கொடுக்க வாட்ஸ் அப் முடிவெடுத்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply