வெளியானது அப்பிளின் புதிய கைக்கடிகாரம்

Loading...

வெளியானது அப்பிளின் புதிய கைக்கடிகாரம்சென்ற செப்டம்பர் மாதம், ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் என்ற வரிசையில், டிஜிட்டல் ஸ்மார்ட் “கடிகாரங்களை” வெளியிட இருப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 9 அன்று அவை குறித்த முழு விபரங்களையும் வெளியிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில், ஆப்பிள் அலுவலகத்தில், அழைக்கப்பட்ட பல நூறு பேர்களின் முன்னால், ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், இந்த ஸ்மார்ட் கடிகாரங்களை வெளியிட்டு உரையாற்றினார். ஸ்போர்ட்ஸ், ஸ்டீல் மற்றும் வாட்ச் எடிஷன் என மூன்று வகைகளில், இருவேறு அளவுகளில் இவை கிடைக்கும்.

இவற்றின் தொடக்க விலை 349 டாலராகவும், 18 காரட் தங்க முலாம் பூசப்பட்ட உரையுடன் கூடிய, ஆப்பிள் வாட்ச் எடிஷன் என்ற ஸ்மார்ட் வாட்ச் 10,000 டாலருக்கும் மேலாகவும் விலை இருக்கும் எனவும் அறிவித்தார். இதுவே, சிகப்பு பக்கிள் கொண்ட வாட்ச் எடிஷன் ஆக இருந்தால், விலை 17 ஆயிரம் டாலர். வரும் ஏப்ரல் 24 முதல், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கிடைக்கும். பின்னர், மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

ஆப்பிள் வாட்ச் என்பது, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனமாகும். இது ஒரு ஸ்மார்ட் வாட்ச். முன்பு, ஆப்பிள் நிறுவனம் ஐபாட் நானோவுடன் இணைந்து செயல்படும் வகையில் கைகளில் அணியக் கூடிய சாதனத்தினைத் தயாரித்து வழங்கியது. இப்போது வந்திருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அதைப் போன்றது அல்ல. இது முற்றிலும் புதிய கட்டமைப்பில் உருவானதாகும். இது தன்னுடைய அப்ளிகேஷன்களைத் தானே இயக்கி செயல்படும். ஐபோன்களுடன் தொடர்பு கொண்டு இயங்கும் இயக்கத்தினையும் கொண்டிருக்கும்.

இவை குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.
அலுமினியம் கேஸ் அமைந்த ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட், சில்வர் மற்றும் கிரே வண்ணங்களில் வெளிவருகிறது. உயர் ரக பிளாஸ்டிக்கிலான சுற்று வளை, கரங்களைப் பிடித்தவாறு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 38 மிமீ அளவிலான வாட்ச் 349 டாலர். 42 மிமீ அளவிலானது 399 டாலர்.

ஸ்டீல் வெளித்தகடு மூடி கொண்ட ஆப்பிள் வாட்ச் 389 மற்றும் 1,049 டாலர் என அளவிற்கேற்ற வகையில் விலையிடப்பட்டுள்ளன. 18 காரட் தங்க முலாம் பூச்சு தகடு கொண்ட ஆப்பிள் வாட்ச் தொடக்க விலை 10,000 டாலர். அளவு அதிகரிக்கையில் விலையும் அதிகரிக்கிறது. ஏப்ரல் 10 முதல், அனைத்து மாடல் ஆப்பிள் வாட்ச்களுக்கும், வாங்குவதற்கான முன் பதிவினை மேற்கொள்ளலாம். ஏப்ரல் 24 முதல் ஆப்பிள் வாட்ச் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படும்.

பெரும்பாலான நாடுகளில் இவை விற்பனக்கு வருகின்றன.
ஆப்பிள் வாட்ச் இயக்க, ஐபோன் 5, ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் அல்லது ஐபோன் 6 ப்ளஸ் தேவை. இவற்றில் ஐ.ஓ.எஸ். 8.2 அல்லது பின்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 8.2 சிஸ்டம் ஆப்பிள் வாட்ச் அப்ளிகேஷனை உங்கள் ஐபோனுடன் இணைக்கிறது. வாட்ச் இயங்கத் தேவையான அப்ளிகேஷன்களை, ஐ போன் மூலம், ஆப்பிள் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், வாட்சில் காட்டப்படும் அறிவிப்புகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.
இந்த கடிகாரம், நாம் வைத்து இயக்கும் ஐபோனுடன் வை பி அல்லது புளுடூத் மூலம் இணைந்து இயங்குகிறது. புளுடூத் கதிர்களின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் எங்கு வைத்து வேண்டுமானாலும் இயக்கலாம்.
இதில் உள்ள பேட்டரி, ஒரு நாள் முழுவதும் செயல்படும். அதாவது அதிக பட்சம் 18 மணி நேரம் செயல்படும். எனவே, இரவில் இதனை முழுமையாக சார்ஜ் செய்திட வேண்டும். வாட்சின் வலது பக்கம் உள்ள மேக்னடிக் சர்குலர் சார்ஜரை இழுத்து சார்ஜ் செய்திட வேண்டும்.

ஆப்பிள் வாட்ச் ஒன்றை நேரடியாக இன்னொரு ஆப்பிள் வாட்சுடன் இணைக்கலாம். உங்களுடைய நண்பரின் கவனத்தை இதன் மூலம் திருப்பலாம். ஐபாட் போல இசையை இயக்கும்; இதயத் துடிப்பினை அறிவிக்கும் திறன் கொண்ட, உடல் நலம் பேணி தகவல் அளிக்கும் கடிகாரமாக இருக்கும்; செய்திகளை அனுப்பவும் வாங்கவும் செயல்படக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இருக்கும்; போன் அழைப்புகளை இயக்கும், பெறும். பேச்சுக்களைப் பதிவு செய்திடும். மற்ற சில அப்ளிகேஷன்களை இயக்கும் இணைய தளம் போலவும் இயங்கும்.

ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் கண்ட்ரோல் செண்டர் போல, ஆப்பிள் வாட்சின் திரையின் கீழாக இருந்து ஸ்வைப் செய்திட்டால், Glances எனப்படும் அறிவிப்புகளைக் காணலாம். சீதோஷ்ண நிலை, மேப், மியூசிக் என இது பலவகையில் இருக்கும்.

மின் அஞ்சல்களை, கடிகாரத்தின் மணிக்கட்டினைத் திருப்பிப் பார்வையிடலாம். தேவையானவற்றைக் குறித்து வைக்கலாம். படித்துவிட்டதாக அமைத்திடலாம். வேண்டாம் என்றால் ட்ரேஷ் பெட்டிக்குத் தள்ளலாம்.

இதன் திரையில் இரு விரல்களை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்தால், வாட்சில் உள்ள இதயத்துடிப்பினை அளக்கும் சென்சார், துடிப்பினை அளந்து காட்டும்.

உங்களை யாராவது சந்திக்க வேண்டும் என விரும்பி, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் இருக்கும் இடத்தினை வாட்ச் அவருக்கு அறிவிக்கும்.

இத்தனைக்கும் மேலாக, இதில் உள்ள “ஆப்பிள் பே” என்னும் டூல் வழியாகப் பணம் செலுத்தலாம். இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் செயல்படும். மணிக்கட்டினை சிறிது அசைத்துக் காட்டி, பதிவு செய்யப்பட்டுள்ள கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்தால், பணம் செலுத்தப்பட்டுவிடும். எனவே, பாக்கெட்டில் பணம், கிரெடிட் கார்ட் எதுவும் இல்லாமல், போனை மட்டும் எடுத்துச் சென்று பொருட்கள் வாங்கலாம்.

உங்களிடம் ஆப்பிள் டிவி இருந்தால், அதற்கான ரிமோட் கண்ட்ரோல் சாதனமாகவும் இதனை இயக்கலாம். வீடுகளில் இயங்கும் மற்ற ஆப்பிள் சாதனங்களுக்கும் தொடர்பு சாதனமாகப் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் ஸ்மார்ட் லாக் எனப்படும் டிஜிட்டல் பூட்டு இருந்தால், அதனை இந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு திறக்கலாம். செட் செய்த பின்னர், வாட்சை அதன் முன் அசைத்தால் போதும். கதவுகள் திறக்கப்படும்.

ஐபோனின் வயர்லெஸ் இணைப்பு திறனைப் பயன்படுத்தி, வீட்டில் இயங்கும் தெர்மோஸ்டெட் போன்ற சாதனங்களையும் இயக்கலாம்.

50 மில்லி செகண்ட் அளவிற்கு நேரத்தைத் துல்லியமாகக் காட்டும் கடிகாரமாகவும் இது இயங்கும். இந்த கடிகாரத்தின் டயல் பக்கத்தினை நாம் கற்பனையில் எண்ணும் வடிவத்தில் பல நூறு தனி வடிவங்களில் அமைத்துக் கொள்ளலாம். இதன் வண்ணங்களைத் தரும் திறனும் மிக அதிகம். அன்றைய சீதோஷ்ண நிலை மட்டுமின்றி, வர இருக்கும் வாரத்தில் ஒவ்வொரு நாளும் எபப்டி இருக்கும் என்பதனையும் காட்டும். நாம் அமைத்துக் கொள்ளும் நம் வேலை நேரத் திட்டத்தினையும் ஏற்றுக் கொண்டு, குறிப்பிட்ட நாட்களில், நேரத்தில் நினைவு படுத்தும்.

மற்ற ஸ்மார்ட் வாட்சுகளுடன் இணைந்து ஒரே இயக்கத்தினைத் தரும் சாதனமாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
ஐபோன் 5 மற்றும் அதன் பின்னர் வந்த சாதனங்களுடன் புளுடூத் மற்றும் வை பி வழியாக இணைந்து இது இணைவாகச் செயலாற்றும். ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேஷன்ஸ், மின் அஞ்சல் தகவல்கள், காலண்டர் நினைவூட்டல்கள், டெக்ஸ்ட் மெசேஜ், போன் அழைப்புகள் ஆகியவற்றைக் காட்டும்.

இதில் காட்டப்படும் மூன்று வளையங்கள், நீங்கள் எத்தனை கலோரி சத்தினை எரித்துள்ளீர்கள் என்று காட்டும். மேற்கொள்ளப்படும் உடல் பயிற்சி வகையினை ஒரு வளையம் காட்டும். எத்தனை முறை நீங்கள் உட்கார்ந்து எழுந்தீர்கள் என்பதை இன்னொரு வளையம் காட்டும். அதாவது ஒரு நாளில், நீங்கள் இந்த வகைகளில் ஒரு வளையத்தை முழுமையாக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை. நீங்கள் எழாமல், உட்கார்ந்தே தொடர்ந்து வேலை செய்தால், இந்த வாட்ச் அலாரம் ஒன்றை அடித்து, நீங்கள் எழுந்து செல்ல வேண்டிய நேரம் என்று காட்டும்.

விமானப் பயணங்களுக்கான போர்டிங் பாஸ், நீங்கள் கவனித்து வரும் நிறுவனப் பங்குகளின் விலை ஆகியவற்றைத் தொடர்ந்து காட்டும். இதில் உள்ள சீதோஷ்ண நிலை காட்டும் அப்ளிகேஷன், அன்றைய சீதோஷ்ண நிலையயும், வரும் வாரத்திற்கான சீதோஷ்ண நிலை அறிவிப்பினையும் காட்டும்.

தர்ட் பார்ட்டி நிறுவனங்கள் தரும் அப்ளிகேஷன்கள் இன்னும் பலவகையான அறிவிப்புகளைக் காட்டும், எடுத்துக் காட்டாக, ஹோட்டல் ஒன்று தனக்கென ஓர் அப்ளிகேஷனை உருவாக்கி இருந்தால், அது ஆப்பிள் வாட்சில் இணைக்கப்படுகையில், அந்த விடுதியில் நீங்கள் பதிவு செய்த அறை, எந்த நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு ஆகியவை காட்டப்படும்.

ஆனால், இவற்றை ஆப்பிள் நிறுவன அறிவிப்பில் கேட்கும் போது, ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது. இந்த டிஜிட்டல் வசதிகளைத் தரும் வாட்ச் சந்தையில், ஆப்பிள் தாமதமாகத்தானே நுழைந்துள்ளது. ஏற்கனவே, மோட்டாரோலாவின் மோட்டோ 380, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ,ஓ.எஸ். இயக்கத்துடன் இணைந்து இயங்கும் பெப்பிள் வாட்ச், மற்றும் சாம்சங், எல்.ஜி. ஆகியவற்றின் வாட்ச்கள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்தில் உள்ளன. இவை தரும் அம்சங்களை எல்லாம் எடுத்து, தன் இயக்கமாக, சில நகாசு வேலைகளுடன், ஆப்பிள் தன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் தந்துள்ளது. பெரிய வித்தியாசம் என்னவென்றால், இதன் விலையும் வடிவமைப்புமே. கூடவே, ஆப்பிள் நிறுவனத்தின் பெயரும் இணைய, இது இன்று புதியதாய்ப் பிறவி எடுத்த தோற்றத்துடன் சந்தையில் நுழைந்துள்ளது. புதிய கட்டமைப்பு, தோற்றம் மற்றும் சில வசதிகளூக்காக மக்கள் இதனை விரும்பி வாங்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply