யூடியூப் தெரிந்து கொள்ளுங்கள்

Loading...

யூடியூப் – தெரிந்து கொள்ளுங்கள்கடந்த பத்தாண்டுகளில் உலகமெங்கும் உள்ள இளம்தலைமுறையினரின் அன்றாடத்தை மாற்றியதில் யூடியூப் வீடியோ பகிர்வு இணையதளத்துக்குப் பெரும் பங்குண்டு. சினிமா, பொழுதுபோக்கு, சோகம், கேளிக்கை, கேலிக்கூத்து, விளம்பரம், வக்கிரம், அபத்தம் என எல்லாவற்றையும் அதில் பகிர்ந்துகொள்ளலாம்.

பெரிய வீடியோ கருவிகளோ, எடிட்டிங் தொழில்நுட்பங்களோ அவசியமில்லை. குறைந்த விலை மொபைல் போனில் எடுக்கப்பட்ட எளிய வீடியோகளைக் கூட அப்லோட் செய்யலாம். கமல்ஹாசன், தனுஷ் தொடங்கி சாமானியர்கள்வரை சகஜமாகப் புழங்கக்கூடிய இடம் இது. இந்தியாவின் முன்னணிப் பாடகர்களுக்கே கிடைக்காத புகழை சர்வதேச அளவில் கொடுத்த தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யூடியூப்பில்தான் வெளியிடப்பட்டு கோடிக்கணக்கான ரசிகர்களை ஈட்டியது. தப்போ, சரியோ மனிதகுலம் அடைந்திருக்கும் டிஜிட்டல் பரிணாமத்தைக் காட்டும் ஒலி-ஒளி ஆடி என்று யூடியூப்பை அழகாகச் சொல்லிவிடலாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆன்லைன் டேட்டிங் வீடியோ தளமாகத் தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பேபால் (PayPal) நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சட் ஹர்லி, ஸ்டீவ் சான் மற்றும் ஜாவேத் கரிம் ஆகியோர் சேர்ந்து இதைத் தொடங்கினார்கள்.

யூடியூப்-ன் நிறுவனர்களில் ஒருவரான ஜாவேத் கரிம், சான்டியாகோ விலங்குக்காட்சி சாலையில் ‘மீ அட் தி ஜூ’ என்ற பெயரில் வெளியிட்ட வீடியோவைப் பார்த்தாலே போதும், ஆன்லைன் டேட்டிங்கிலிருந்து யூடியூப் விலகிய பாதையை.

சாதாரணருக்கும் எளிதாகக் கிடைக்கும் டிஜிட்டல் வீடியோ தொழில்நுட்பத்தை என்ன செய்வது என்பதற்கான பதில்தான் யூடியூப். மொபைல் போனில் தொடங்கி, கல்யாண வீட்டிலிருந்து சுடுகாடு வரை நாம் எடுக்கும் வீடியோ பதிவுகளை நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமின்றி உலகம் முழுக்கப் பார்க்கும் வசதியை யூடியூப் உருவாக்கியது. யூடியூப் வீடியோ இணையதளம் வரும்வரை, ஒருவர் தனது வீடியோக்களை இணையதளத்தில் பகிர்வதற்குச் சொந்தமாக வலைப்பக்கம் தொடங்கி பிளாஷ் வீடியோவாகப் பகிர்வது மட்டுமே சாத்தியம். ஆனால் யூடியூப்பில் ஒருவர் தனது சொந்த வீடியோவைப் பகிர மின்னஞ்சல் முகவரி ஒன்றே போதுமானது.

யூடியூப் வீடியோ தளத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் தனக்கென ஒரு சேனலையே பராமரிக்கலாம். நமது குழந்தையின் செல்லச் சேட்டைகள், நமது வளர்ப்புப் பூனையின் குறும்புகள் என நாம் சுவாரசியம் என்று நினைக்கும் அனைத்துக் கதைகளையும் யூடியூப்பில் சொல்ல முடியும். உங்கள் வீடியோ வெறுமனே 10 பார்வையாளர்களைப் பெறலாம். உங்களுக்கு அதிர்ஷ்டமோ, திறமையோ இருந்தால், அல்லது இரண்டும் இருந்தால் ஒரே நாளில் லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்று உலகப் புகழை அடையலாம். இணையத்தைப் பொறுத்தவரை இளைஞர்களின் மனதைப் போலவே கணத்துக்குக் கணம் மனநிலை மாறக்கூடிய இடம் அது.

ஒவ்வொரு நிமிடமும் 300 மணி நேர அளவிலான வீடியோக்கள் யூடியூப்பில் அப்லோடு செய்யப்படுகின்றன. கூகுள் மற்றும் பேஸ்புக்கை அடுத்து அதிகம் பார்க்கப்படும் இணையதளம் இது. 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவை உலுக்கிய சுனாமியின் வீடியோபதிவைத் தேடிக் கிடைக்காமல் விரக்தியடைந்ததால் உருவான வீடியோ இணையதளம் இது.

யூடியூப் வீடியோ கலாசாரம் உலகம் முழுவதும் பல நல்ல விளைவுகளையும், அதேவகையில் மோசமான தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஊடகமாகவும், உலகளாவிய கல்வித் தொடர்பு சாதனமாகவும் விளங்குகிறது. ஆனால் அபத்தங்களுக்கும், கேலிக்கூத்துகளுக்கும், ஆபாசமான விமர்சனங்கள் புழங்கும் தளமாகவும் யூடியூப் உள்ளது.

சமூகப் போராளிகள், அரசியல்வாதிகள், சினிமாக் கலைஞர்கள், தீவிரவாதிகள், குழந்தைகள், விலங்குகள் என எல்லாரும் சமமாகப் புழங்கும் இடம் என்றால் அது யூடியூப்தான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply