நகச்சுத்திக்கு எலுமிச்சை பயன்படுத்துவர்களா நீங்க

Loading...

நகச்சுத்திக்கு எலுமிச்சை பயன்படுத்துவர்களா நீங்கநகம், விரல்களுக்கு அழகு தரும் விஷயம் மட்டுமல்ல, அதற்கு அடியில் ரத்த ஓட்டம் கொண்ட திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது. அதை நகத்தளம் என்பார்கள். இந்த நகத்தளத்தை கடந்து வளரும் நகப்பகுதி செத்துப்போய்விடும். வளர்ந்த நுனி நகத்தை நாம் வெட்டும் போது நமக்கு வலி தெரியாமல் இருப்பது இந்த காரணத்தால் தான்.

நகப்பகுதியில் ஏதாவது எதிர்பாராத விதமாக விழுந்து விட்டாலோ, அடிபட்டாலோ விண்ணென்று வலிக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு வலி, சற்று குறைந்தது போல் தோன்றும். ஆனால் நகத்தளத்தில் ரத்தம் கட்டிக்கொண்டது என்றால், அது கடுமையான வலியை ஏற்படுத்தும். ஐஸ் ஒத்தடம் கொடுப்பதே நல்லது. அப்போதும் வலி குறையாமல் அடிபட்ட நகப்பகுதி கருநீல நிறத்தில் காட்சி தந்தால் டாக்டரிடம் தான் செல்ல வேண்டும்.

அந்த விரலை தற்காலிகமாக மரத்துப்போக வைத்து, நகத்தின் அடியில் கட்டிக்கொண்டிருக்கும் ரத்தத்தை நீக்கினால்தான், அது குணமாகும். சிலர் நகங்களை வெட்டுகிறேன் என்று நகத்தை ஒட்ட வெட்டி விடுவதுதான் ஆரோக்கியம் என்று நினைக்கின்றனர்.

அப்படி செய்தால் ஆபத்துதான் நேரும். விரல்களுக்கு ஒரு கவசம் போல் ஸ்பூன் வடிவத்தில் நகமுனை இருப்பது போல லேசாக வெட்டுவது தான் நல்லது. நகங்களை கடிப்பது சரியல்ல. சிலர் நகங்களோடு சேர்த்து பிசிறாக தொங்கும் தோலையும் சேர்த்து கடித்து துப்பி விடுகிறார்கள். இப்படி பிய்ந்த பகுதியில் அழுக்கு சேர்ந்து ‘செப்டிக்’ ஆனால் அதுதான் நகச்சுத்தி.

பெரும்பாலும் ஆள்காட்டி விரலிலோ அல்லது கட்டை விரலிலோ தான் நகச்சுத்தி வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. நகச்சுத்தி வந்த இடம் சிவப்பாக பளபளவென்று இருக்கும். தொட்டாலே துடிக்க வைத்து விடும். நகச்சுத்தி என்றவுடன் சட்டென்று ஒரு எலுமிச்சம்பழத்தை அதில் சொருகி விடுகிறார்கள். எலுமிச்சம்பழத்தில் உள்ள அமிலம் ஒரு வகையில் ஆன்டிசெப்டிக் போல பயன்படும், என்றாலும் அது எந்த வகையிலும் நக வலியை குறைத்து விடாது. வலியையும் வேதனையையும் அதிகப்படுத்தும்.

காரணம் விரலை எலுமிச்சம் பழம் சற்று முரட்டுத்தனமாகவே நெருக்கிக்கொண்டிருப்பதால் புண்ணால் உருவான சீழ், நகத்தின் அடித்தளத்துக்கும் கீழே பயணித்து, விரல் நுனி எலும்பையும் பாதிக்கலாம். நகத்தின் கீழ்ப்பகுதி செப்டிக் ஆகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாகிவிடும்.

இதையெல்லாம் தவிர்க்க நகச்சுத்திக்கு எலுமிச்சையை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உரிய நேரத்தில் நகச்சுத்திக்கு அறுவை சிகிச்சை செய்யத்தவறினால் விரலையே இழக்க நேரிடும். இந்த நகச்சுத்தி விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply