டிஜிட்டல் பேனருக்கு வயது 20

Loading...

டிஜிட்டல் பேனருக்கு வயது 20முன்பெல்லாம் ஒரு நிறுவனம் தன் தயாரிப்பை விளம்பரம் செய்ய பெரிய போர்டுகளையும், முக்கியமான இடங்களில் பேனர்களாகவும் கட்டி வந்தன.

தொழில்நுட்ப வளர்ச்சியில் மேம்பாடு அடைந்த பின்னர் டிஜிட்டல் மீடியாக்களின் ஆதிக்கத்தில் விளம்பரங்கள் வலுப்பெற துவங்கின. டிவி,ரேடியோ ஆகியவற்றுக்கு பரவிய விளம்பரங்கள் மெல்ல இணையதளங்களில் தலைகாட்ட துவங்கின.

அப்படிபட்ட சூழலில் டிஜிட்டல் பேனர்கள் தங்கள் முத்திரையை பதிக்க துவங்கின. சரியாக 20 வருடங்களுக்கு முன்னால் இந்த டிஜிட்டல் பேனர்களை ஏடி&டி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இன்று உலகமே டிஜிட்டல் மயமாவதால் இந்த டிஜிட்டல் பேனர்களின் வருகை நிறுவனங்களுக்கு விளம்பர ரீதியாக லாபத்தை தருவதாக உள்ளது.


டிஜிட்டல் பேனர் ஏன்?

இந்த டிஜிட்டல் பேனர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி அனைவருக்குமே எழுகிறது. உள்ளூரில் கடை வைத்திருப்பவர் துவங்கி பல கோடிகளில் தொழில் செய்பவர் வரை அனைவருக்குமே, டிஜிட்டல் பேனர் அதிகம் உதவக்கூடிய ஊடகமாக இருக்கிறது. இந்த டிஜிட்டல் பேனர்களுக்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய தேவையில்லை.உங்கள் கணினியில் ஒரு விளம்பரத்தை அனைவரும் கவரும் வகையில் வடிவமைத்து அதனை இணையதளங்களில் பயன்படுத்தினாலே போதும்; நிறைய மக்களை சென்றடைந்துவிடும்.

அது தவிர, ஒரு இடத்தில் விளம்பரங்களை வைக்கும்போது அதனை நிறைய பேர் பார்க்கலாம். ஆனால், அனைவரும் அந்த பொருளை வாங்க விரும்புவார்களா என்றால் சந்தேகம்தான். ஆனால் டிஜிட்டல் பேனர்கள் யாரால் விரும்பப்படுகின்றன என்பதையும், குறிப்பிட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த பேனர்கள் வாடிக்கையாளர்களாலும் கூட அதிகம் விரும்பப்படுகின்றன.

இதில் இரண்டு வகையில் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைகின்றன. முதல் வகை, ஒரு நிறுவனத்திடம் பேசி குறிப்பிட்ட தொகைக்கு விளம்பரங்களை அந்த இணையதளத்தில் இடம்பெற செய்வது. இதன் மூலம் சரியான குழுவை கவர முடியும். ஆனால் இது குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்கிவிடுபவையாக இருக்கும்.

ஆனால் மற்றொரு வகை என்பது கூகுள் அட்வர்ட்ஸ் போன்றவை. இதில் விளம்பரம் கொடுக்க நினைப்பவர், தன் விளம்பரத்தை கூகுள் போன்ற நிறுவனத்திடம் விற்றுவிடுவார். அவர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பதிவு செய்த இணையதளங்களிடம் விற்று, அவர்கள் இணையதளம் வழியே எவ்வளவு பேர் உள்நுழைகிறார்கள் என கணக்கிட்டு பணத்தை வழங்கும். இப்போது கூகுள் அட்வர்ட்ஸ் போன்று பல நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. இதன் மூலம் விளம்பரங்கள் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளன.


என்ன லாபம்?

1.நாம் தேடி சென்று யாரிடமும் விளம்பரப்படுத்த வேண்டிய வேலை இல்லை. இந்த டிஜிட்டல் பேனர்கள் தானாகவே நிறைய பேரை சென்றடையும். அனைத்து இணையதளங்களும் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப விளம்பரங்களை காட்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிறைய பேரை இந்த விளம்பரங்கள் சென்றடைகின்றன.

2. அதிக பணம் விளம்பரத்துக்காக செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை செய்ய குறைந்த செலவே ஆவதும், அடிக்கடி வடிவமைப்பை மாற்றி கொள்ளலாம் என்பதால் ஒரே விளம்பரத்தை நீண்ட நாட்கள் தொடர அவசியமில்லை. அப்டேட்டுகளை இந்த டிஜிட்டல் பேனர்கள் எளிதில் செய்துவிடுகின்றன.

3.சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருப்பது என்ற முறை இதில் சிறந்த விஷயமாக உள்ளது. பழைய முறை பேனர்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லை.


டிஜிட்டல் பேனரின் எதிர்காலம்!

இன்று உலகமே டிஜிட்டல் பேனருக்கு மாறியுள்ள நிலையில் இந்த துறை அதிகம் வளர வாய்ப்புள்ளது. இந்த துறையின் வளர்ச்சி இந்த வருடம் சர்வதேச அளவில் 46 பில்லியன் அளவிலான விளம்பரங்கள் வந்துள்ளதாக விளம்பரதாரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த டிஜிட்டல் விளம்பரங்கள் அனைத்து துறைகளிலும் உள்நுழைய துவங்கிவிட்டன. இன்று ஃபேஸ்புக் வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ் மார்க்கெட்டிங் என அனைத்திற்குமே இந்த டிஜிட்டல் பேனர்கள் உதவுகின்றன. இந்த டிஜிட்டல் பேனர்கள் இந்தியாவில் அதிக அளவில் வரத் துவங்கியுள்ளன.

ஏற்கெனவே பொங்கல் வாழ்த்துக்களும், தீபாவளி வாழ்த்துகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், ஒருநாள் திடீரென காலையில் பார்த்தால் போஸ்டர்கள், பேனர்கள் இல்லாத டிஜிட்டல் பேனர்கள் செல்போனிலும், கணினியிலும் உள்ள நிலை உருவாகும். ‘இப்படம் இன்றே கடைசி!’ என்பதும் கூட டிஜிட்டல் மயமானால் ஆச்சர்யம் இல்லை!

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply