எப்போதும் இணையத்தில் மூழ்கி முத்தெடுக்கிறீர்களா ஆம் எனில் இப்பதிவு உங்களுக்கானதே

Loading...

எப்போதும் இணையத்தில் மூழ்கி முத்தெடுக்கிறீர்களா ஆம் எனில் இப்பதிவு உங்களுக்கானதேதொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவதற்கான சேவை’ அமைப்பான ஷட் க்ளினிக் (SHUT) தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிமையானோருக்குச் சிகிச்சை செய்யும் மையத்தை பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இணையதளம் மற்றும் குறுஞ்செய்திப் பழக்கத்திற்கு வளரிளம் பருவத்தினர் அடிமையாவதாக இந்த அமைப்பு கூறுகிறது.

17 வயது ரஜத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஜூனியர் காலேஜில் சேர்ந்து படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். அவர் தினசரி சைபர் கஃபேயில் 10 முதல் 12 மணி நேரத்தைச் செலவழிக்கிறார். அங்கே வீடியோ கேம்ஸ் விளையாடுவதுதான் அவரது பொழுதுபோக்கு. அன்றாட வீட்டுக்காரியங்கள் எதிலும் அவருக்கு ஈடுபாடு இல்லை.

பெற்றோருடன் இயல்பாகப் பேசுவதுகூட இல்லை. ஆனால் அவர் கணிப்பொறி விளையாட்டில் இதுவரை தோற்றதே இல்லை. ஒருகட்டத்தில் ரஜத்தின் உறக்கமும் பாதிக்கப்பட்டது. ப்ரவுசிங் மையத்தில் கட்டணம் செலுத்துவதற்காக ரஜத் திருடக்கூட ஆரம்பித்தார். ரஜத்தின் பெற்றோர்கள் கடைசியாக பெங்களூருவில் சமீபத்தில் பிரபலமாகியுள்ள ஷட் கிளினிக்குக்கு ரஜத்தை அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

ரஜத்திடம் பல அமர்வுகள் பேசிய பின்னர், அவனுக்குப் பிடித்த ஒரு செயலில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. கல்லூரிக்குத் திரும்பச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் ரஜத் ஒத்துழைக்க மறுத்தான். “அவனை ஊக்குவிக்க தொடர்ந்து முயன்று வருகிறேன்.” என்கிறார் பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் கிளினிக்கல் சைக்காலஜி துறைப் பேராசிரியர் குமார் சர்மா.

நிம்ஹான்ஸ் மருத்துவமனைதான் இந்த ஷட் க்ளினிக்கைக் கடந்த ஏப்ரலில் தொடங்கியுள்ளது. மொபைல்கள், இணையதளங்கள் ஆகியவற்றை அபரிமிதமாகப் பயன்படுத்தும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

“ எங்கள் கிளினிக்கில் நாங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை இன்டர்நெட் விளையாட்டுக்கு வளரிளம் பருவத்தினர் அடிமையாகும் விவகாரம்தான். அடுத்தாக, ஃபேஸ்புக்கை அதீதமாகப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையான பலரும் ஆலோசனைக்காக வருகிறார்கள். ஆபாசப் படங்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கம் உள்ளவர்களும் அதிகம் உள்ளனர்” என்கிறார் மருத்துவர் சர்மா.

ஒருவர் இணையம், மொபைல் ஆகியவற்றுக்கு அடிமையாகிவருகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள நான்கு அம்சங்கள் உள்ளன. எப்போதும் இணையத்தையோ மொபைலையோ நோண்டிக்கொண்டே இருக்கும் ஆசை, ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமை, மொபைல் அல்லது இணையம் இல்லாமல் இருக்கவே முடியாது என்னும் கட்டாய உணர்வு, அபரிதமான பயன்பாட்டால் விளையும் உடல்ரீதியான அல்லது மனரீதியான பாதிப்புகள்.

ஆனால் இந்த அம்சங்களை வைத்து இன்றுள்ள இளைஞர்கள் அனைவரையும் தொழில்நுட்பத்திற்கு அடிமையாவர்கள் என்று வரையறுத்துவிட முடியுமே “ஆம். உண்மைதான். இன்று நமது வேலைகள் அனைத்தையும் இணையம் வழியாகவே செய்கிறோம். ஆனால் அதுபோக மற்ற வேலைகளில் உங்களால் முழுமனதுடன் ஈடுபட முடிகிறதா? அதை வைத்தே இந்தப் பழக்கத்தை வரையறுக்க வேண்டும்.

கைபேசியில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்பதைக் கவனிக்காமல் குடும்பத்தினருடன் உங்களால் அரட்டை அடிக்க முடிகிறதா? ஃபேஸ்புக்கைப் பார்க்காமல் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடுகிறீர்களா? எப்போதும் கணிப்பொறியின் முன்பாகவே உட்கார்ந்திருப்பதாகக் குடும்பத்தினர் புகார் செய்கிறார்களா? இதற்கு நீங்கள் சொல்லும் பதிலில்தான் உங்களுக்குப் பிரச்னை இருக்கிறதா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்கிறார் அவர்.

ஷட் மருத்துவமனையில் உளநோய் சிகிச்சை, உளவியல், உளவியல் சமூகப்பணி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். தினந்தோறும் ஷட் கிளினிக்கிற்கு வருபவர்களில் இரண்டு, மூன்று பேராவது இந்தப் பிரச்சினைகளுக்காக வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 19 வயது வரையிலானவர்கள் என்கிறார் சர்மா. தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல்கள் வழியாகவும் இந்தியா முழுவதும் இருந்து ஆலோசனைக் கோரிக்கைகள் வருகின்றன.

ஷட் கிளினிக்கை அணுகும் ஒரு நபருக்கு, என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை நேர்காணல் வழியாகக் கண்டறிகின்றனர். அதற்குப் பின்னர் அவர்கள் அடிமைப்பட்டுள்ள தொழில்நுட்பத்தைக் குறைவாகப் பயன்படுத்தவும் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான ஆலோசனைகளும் கூறப்படுகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர், முதலில் தான் பாதிக்கப்பட்டிருப்பதை உணர வேண்டும். அப்போதுதான் நிவாரண நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்கிறார் சர்மா. அவர்கள் அதீத அடிமைத்தனத்திலிருந்து விடுபடக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியும் அவசியம்.

2013-ல் பெங்களூருவில் நவீனத் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகும் வளரிளம் பருவத்தினரிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்னவென்று கண்டறியப்பட்டுள்ளன. கல்வியில் நாட்டமின்மை, சமூக வாழ்க்கையில் குறைபாடு, பொழுதுபோக்கில் ஈடுபாடின்மை ஆகியவற்றால் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்துள்ளது. அலுப்பைத் தீர்க்கவே பெரும்பாலானவர்கள் இணையம் போன்ற ஊடகங்களில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு ‘சவுகரிய’ உணர்வையும் அளிக்கிறது.

பெங்களூருவில் உள்ள ஷட் மருத்துவமனை ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2.30 முதல் 4.30 வரை இயங்குகிறது. அத்துடன் இங்கே ‘சப்போர்ட் க்ரூப்’ எனப்படும் சகாக்கள் குழுவும் உள்ளது. அந்தக் குழுவினர் ஏற்கெனவே இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு தற்போது நலம்பெற்று வருபவர்கள். அவர்கள் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை அன்று மதியம் 3 மணி முதல் 4.30 வரை கூடுகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply