உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவையான புரதம்

Loading...

உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவையான புரதம்புரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம். செரிமானத்தின் போது வயிற்றில் புரதம் சிறு துகள்களாக உடைக்கப்படுகின்றது. புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துணவாகின்றன.

இந்த அமினோ அமிலங்கள் பல பிரிவு உண்டு. சில புரத உணவுகளில் பெரும்பாலும் அனைத்தும் கிடைத்து விடும். அசைவ உணவு, பால் பொருட்கள், மீன், முட்டை இவை ஒரு பிரிவு. தாவர வகையில் முழு தானியங்கள், பருப்புகள், கொட்டை என பிரிவுகள் உண்டு. உடலில் நீருக்குப் பிறகு அதிகம் இருப்பது புரத சத்துதான்.

உடல் உறுப்புகள், நகம், தலைமுடி, சருமம் இவை அனைத்திலும் புரதமே உள்ளது. புரதமே திசுக்களின் உருவாக்கத்திற்கு காரணம் ஆகின்றது. அசைவம், பால், முட்டை இவை முழு புரதம் கிடைக்க காரணம் ஆகின்றன. தாவர வகையில் கொட்டை, விதை, பழங்கள், பருப்புகள் இவை அனைத்து வகைகளையும் கலந்து உண்ண வேண்டும்.

உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு இவற்றில் குறைந்த அளவே புரதம் உள்ளது. புரதக் குறைவு அநேக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக செயலின்மை, வளர்ச்சி இன்மை, கல்லீரல் பாதிப்பு, வயிறு, கால்கள் பருத்து இருத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதே போல் அளவுக்கு அதிகமான புரதமும் தீமையே ஏற்படுத்தும்.

புரதத்தில் உள்ள அமினோ அமிலம் மூன்று வகைப்படுகின்றது.

* அத்தியாவசியம்
* அவசியமின்மை
* நிபந்தனை காரணம்.


அத்தியாவசியம்:

உணவின் மூலமே கிடைக்கப்பட வேண்டியது. அன்றாடம் ஒவ்வொரு வேளை உணவிலும் சேர்க்கப்பட வேண்டியது.


அவசியமின்மை:

இத்தகை அமினோ அமிலங்கள் உடலில் சேரும் உணவுப் புரதத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.


நிபந்தனை காரணம்:

உடல் நலமின்மை, சோர்வு காலங்களில் தேவைப்படுவது.


புரதத்தின் வேலைகள் :

* உடலை வளர்ப்பது புரதம், தேய்மானங்களை சீர் செய்கின்றது. முடி, சருமம், கண், தசை, உறுப்புகள் இவை அனைத்தும் புரதத்தாலேயே உருவானவை. ஆகவே தான் வளரும் குழந்தைகளுக்கு அதிக புரதம் தேவைப்படுகின்றது.

* புரதம் நல்ல சக்தி அளிக்கும். கார்போஹைடிரேட் இல்லாத சமயத்தில் புரத சக்தியை உடல் எடுத்துக் கொள்ளும்.

* புரதமே உடலில் சில ஹார்மோன்களை உருவாக்குகின்றது.

* என்ஸைம்ஸ் எனப்படுபவை புரதமே. இவை உடலில் ரசாய மாறுதல்களை துரிதப்படுத்துகின்றன.

* ஹீமோடுளோபினும் புரதமே. ஹீமோடுளோபின் தான் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.

* நோய் எதிர்ப்பு பொருட்களை புரதம் உடலில் உருவாக்குகின்றது.

சதை பற்றுள்ள உணவுப் பொருட்கள் புரதம் நிறைந்தவை. (சிக்கன், மீன், அசைவம் மற்றும் பருப்பு வகைகள்) மனிதனின் நீர் அகற்றிய உடலில் பாதி எடை புரதத்தால் ஆனதே. சோயா உணவும் புரதம் நிறைந்ததே. இருப்பினும் தாவர வகையில் உடலுக்குத் தேவையான அனைத்து புரதமும் கிடைக்க பலவகை தாவர உணவை கலந்து உண்ண வேண்டும்.

புரத செரிமானத்தில் வெளிபடும் யூரியா எனும் உபபொருள் சிறுநீரகத்தின் வழியாக சிறுநீராக வெளியேறுகின்றது. அதிகமான புரதம் உட்கொள்ளும் பொழுது இதன் அளவு கூடுவதால் சிறுநீரகம் அதிக வேலை சுமைக்கு ஆளாகின்றது. வயது கூடும் பொழுது மனித உடலின் தசைகள் குறை கின்றன. அதிக நோய், முறையான உணவின்மை இவற்றினாலும் இது ஏற்படும்.

தரம் உயர்ந்த புரதங்களை (உ.ம்) கொழுப்பில்லாத அசைவம்) எடுத்துக் கொள்வதன் மூலம் அடிக்கடி கீழே விழுவது போன்ற அபாயங்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும். கடும் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி முடித்த பிறகு நல்ல புரதம் சத்து கார்போஹைடிரேட் கலந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், முட்டை வெள்ளைக்கரு, சான்ட்விச் போன்றவைகள் நல்லது.


புரதம் உடலில் குறைந்தால் :

* தசை சுருங்கி குறையும்

* கால், கணுக்காலில் நீர்சேர்ந்த வீக்கம் இருக்கும்.

* ரத்த சோகை

* குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு அதிக புரதம் மட்டுமே சிலர் எடுத்துக் கொள்வர்.

* அப்போது 1 கிலோ எடைக்கு 5 கிராம் வரை புரதம் கூடி விடுகின்றது. இது கார்ப்போஹைடிரேட் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் அளவு இல்லாததால் புரதத்திலிருந்தே எரிசக்தியை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும்.

* நார் சத்து குறைந்து விடுவதால் மலச்சிக்கல் முதல் குடல் புற்று நோய் வரை ஏற்படும்.

* புரதத்திலிருந்து மட்டுமே வரும் எரிசக்தியை கொண்டு இருதயம் சீராக வேலை செய்யாது.

* அதிக அசைவ உணவில் அதிக கொழுப்புடன் கிடைக்கும் புரதம் இருதய பாதிப்பினை ஏற்படுத்தும்.

* அதிக புரதம் சிறு நீரகம், கல்லீரல் இரண்டினையும் அதிக வேலை கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

* பித்தப்பை பாதிப்பு, யூரிக் ஆசிட் அதிகம் ஆகிய இரு பாதிப்பும் ஏற்படலாம்.

* அதிக கால்சியம் கரைந்து ஆஸ்டியோ போரோஸிஸ் எனப்படும் எலும்பு கரைந்து சிறுநீரில் செல்லும் பாதிப்பு ஏற்படலாம்.

* நீர் வறட்சி ஏற்படலாம். ஆக உணவிலிருந்தே புரதம் பெற வேண்டும். ஆயினும் மிக அதிக புரதம் குறைந்த கார்போஹைடிரேட் முறையான உணவாகாது.


சிறுநீரில் புரதம் :

சிறுநீரில் புரதம் இருந்தால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும். சிறுநீரகம் ரத்தததிலுள்ள அதிக திரவத்தை வடிகட்டி வெளியேற்றுகின்றது. அதில் புரதம் வெளியேறினால் தவறு. இதற்கு சிகிச்சை பெறாவிட்டால் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டி வரும். சிறுநீர் பரிசோதனை மூலம் இதை அறியலாம். புகை மூட்டம் போன்ற சிறுநீர், கை, கால், முகத்தில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


அன்றாட புரத தேவையின் சராசரி அளவு :

* குழந்தைகளுக்கு தினம் 10 கிராம் புரதம் தேவை.

* பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு 20.34 கிராம் புரதம் தேவை.

* விடலை பருவ ஆண் பிள்ளைகளுக்கு 52 கிராம் தேவை.

* விடலை பருவ பெண்களுக்கு 46 கிராம் தேவை.

* வளர்ந்த ஆணுக்கு சுமார் 50 கிராம் தேவை.

* வளர்ந்த பெண்ணுக்கு சுமார் 45 கிராம் தேவை.

* கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் கண்டிப்பாய் கூடுதல் அளவு தேவை.

மேற்கண்டவை சர்வதேச அளவில் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவில் 1 கிலோ எடைக்கு 1 கிராம் புரதம் என்ற அளவில் இருந்தால் கூட உடல் அமைப்புக்கு புரத பற்றாக்குறையை சீர் செய்து விடலாம். விளையாட்டு பயிற்சிகள் பெறுவோருக்கு கண்டிப்பாக கூடுதல் புரதம் தேவை. உங்கள் அன்றாட உணவில் எரிசக்தி 10 சதவீதத்துக்கு குறையாமலும் 35 சதவீதத்துக்கு கூடாமலும் புரதத்தில் இருந்து கிடைக்க வேண்டும்.

அதிக அளவு அசைவம் உண்ணும் பொழுது புரதம் அதிகரித்து இறப்பு முன்கூட்டியே வருகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. முட்டையின் அதிக மஞ்சள் கருவும், சிவப்பு மாமிசமும் பல்வேறு பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்துகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply