எவ்வாறான பெண்களில் பிரசவத்திற்குப் பின்னர் மன நோய் ஏற்படுகிறது

Loading...

எவ்வாறான பெண்களில் பிரசவத்திற்குப் பின்னர் மன நோய் ஏற்படுகிறதுகுழந்தைப் பிரசவம் சாதாரண சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, சிசேரியன் பிரசவமாக இருந்தாலும் சரி பிரசவத்திற்குப் பின்னர் சில பெண்களில் பாரதூரமான மன உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

இவை கவனிக்கப்படாமல் சரியான சிகிச்சைகள் கொடுக்கப்படாமல் விட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்துக்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.

இதனால் சிலவேளைகளில் தாய் தானே தற்கொலை செய்யக்கூடிய நிலைமைகளும் சிலவேளைகளில் தனது குழந்தையை கொலை செய்து விடக்கூடிய நிலைமைகளும் தோன்றும்.

ஆகையால் இந்த முக்கியமான பிரசவத்தின் பின்னரான மன உளவியல் தாக்கங்கள் அதன் நோய் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்கள் அறிந்திருப்பது முக்கியமானது.

பிரசவத்திற்கு பின்னர் பெண்களில் ஏற்படும் மன அழுத்தம் கிட்டத்தட்ட 15 சதவீதமான தாய்மார்களில் பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படுகின்றன.

இவை பிரசவம் முடிவடைந்து முதல் மூன்று மாதங்களில் கூடுதலாக ஏற்படும்.நோய் அறிகுறிகள் எவை?

சாதாரணமாக பெண்கள் பிரசவத்திற்குப் பின்னர் ஹேர்மோன் மாற்றங்களினாலும், சரியான தூக்கம் இன்மையாலும் புதிய குழந்தையுடன் தமது வாழ்க்கையை இசைவாக்கப்படும் போது ஓரளவு சாதாரண மன நிலைமாற்றங்களை அனுபவிப்பார்கள்.

ஆனால் மிகவும் கவலையாகவும், மிகவும் தம்மைக் குறைத்து மதிப்பிட்டு தாழ்வு மனப்பான்மையாகவும், எதிலும் ஒரு விருப்பில்லாமல் நம்பிக்கை இழந்தவராகவும், மன மாற்றங்கள் கொண்டவராகவும் பல வாரங்களாக இருந்தால் இவ்வாறான நோய்க்குரிய அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் சிலர் சொல்வார்கள் தமது புதிய குழந்தையால் தமக்கு எந்தவிதமான சந்தோசமாகவோ, ஆசையாகவோ இல்லை என்றும் தமக்கு வழமையாக சந்தோசம் தரும் விடயங்கள் கூட தற்போது சந்தோசமாக இல்லை என்றும் கூறுவார்கள்.

இவ்வாறான நோய் அறிகுறிகள் இருக்கும் போது கூட இருப்பவர்கள் அவதானித்து அதற்கான பரிகாரம் தேட முயற்சிக்க வேண்டும்.

இதனை குடும்பத்தவர்கள் அலட்சியப்படுத்தி, கால தாமதமாகி கவனிக்காமல் விட்டார்களாயின் இறுதியில் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான நிலைகள் வரக்கூடும்.

தூக்கமின்மை என்பது பிரசவத்திற்குப் பின்னர் பல தாய்மார்கள் சொல்லும் விடயம். ஆனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தூக்கம் இல்லாத பிரச்சினையால் பெரிதும் அவதிப் படுவார்கள்.

அதாவது குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது தமக்கு தூங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் தூக்கம் இல்லாமல் இருப்பார்கள். சிலர் ஒரே தூக்கம் உள்ளவர்களாவும் இருப்பார்கள்.

மேலும் சாப்பாட்டில் விருப்பம் இல்லாத தன்மையாகவும் பசி இல்லாதவர்களாகவும் காணப்படுவார்கள். சில தாய்மார்கள் இந்த நோயினால் அவதிப்படும்போது மிகவும் பயந்தவர்களாகவும் அமைதியற்ற தன்மையாகவும் அவதிப்படுவார்கள்.வைத்திய ஆலோசனையை எப்பொழுது நாடவேண்டும்

மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் இருவாரங்களுக்கு மேலாக நீடித்தால், நோய் அறிகுறிகள் தீவிரம் அடைந்தவாறு இருந்தாலும், தாய் தன்னைக் கவனிக்காமலும் தனது குழந்தையைக் கவனிக்காமலும் இருந்தால் அல்லது தாய்க்கோ குழந்தைக்கோ தீங்கு செய்யக்கூடியவாறான எண்ணங்கள் இருந்தால் வைத்திய ஆலோசனை உடனடி அவசியம்.பிரசவத்திற்கு பின்னர் மன அழுத்தம் எவ்வாறான தாய்மார்களில் கூடுதலாக ஏற்படுகின்றது

தாய்ப்பாலை விட மாப்பாலை கரைத்து குழந்தைக்குக் கொடுக்கும் தாய்மார்கள், ஏற்கனவே மன அழுத்தம் உள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், பிரசவத்தின் போது பல கடினங்கள், வேதனைகள் அனுபவித்தவர்கள், கர்ப்பகாலத்தில் மிகவும் பயம் அச்சம் உள்ளவர்கள், குடும்ப அங்கத்தவர்களின் பங்களிப்பு உதவிகள் குறைந்தவர்கள், கணவன் மனைவிக்கு இடையில் சரியான புரிந்துணர்வுகள் இல்லாதவர்கள், கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் தாய்மார்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள், திட்டமிடாத கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றவர்கள் போன்றோரில் இப்பிரச்சினை கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது.பிரசவத்திற்கு பின்னரான மன அழுத்தம் எவ்வாறு சிகிச்சை வழங்கப்படும்

பிரசவத்தின் பின்னர் பிறந்த குழந்தையை மட்டும் கவனித்து அதற்கான தேவைகைள பூர்த்தி செய்வதுடன் நின்று விடாமல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

தாயின் மன நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் அவரது சாப்பாட்டு விருப்பம், பசி, தூக்கம், சந்தோசம், கவலை என்பன குறித்து அறிந்தவண்ணம் இருக்க வேண்டும்.

அவருக்குப் பிரச்சினைகள் இருக்கும் போது கணவரோ, மற்றைய குடும்பத்தினரோ அந்தப் பெண்ணை தனிமையில் துன்பப்டாமல் உதவிகள் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் அவதானிக்கப்படும் போது காலதாமதமாக்காமல் தகுந்த மன உளவியல் வைத்திய நிபுணரிடம் அழைத்துச் சென்று அவரது நிலைமைகளை ஆராய்ந்து அதற்கான சரியான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply