கட்டிய வீட்டை இடிக்காமலே உயர்த்த முடியுமா….முடியும்னு சொல்லுது இந்த தொழில்நுட்பம்

Loading...

கட்டிய வீட்டை இடிக்காமலே உயர்த்த முடியுமா....முடியும்னு சொல்லுது இந்த தொழில்நுட்பம்கோவை சாயிபாபாகாலனி ராமலிங்க காலனியை சேர்ந்தவர் டாக்டர் ஆறுமுகம். தரைதளம் மற்றும் இரு மேல் தளங்களுடன் 3500 சதுர அடி கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டுக்கு அருகில் உள்ள ரோடு விரிவாக்கம் செய்து தார் போடப்பட்டது. ரோடு இரண்டடி உயர்ந்ததால் வீடு பள்ளத்தில் இருந்தது. வீடு பள்ளத்தில் இருப்பது வாஸ்துப்படி சரியில்லை என டாக்டர் நினைத்தார். தந்தை கட்டிக்கொடுத்த வீட்டை இடிக்கவும் அவருக்கு மனமில்லை. புதுவையை சேர்ந்த ஆறுமுகத்தின் நண்பர் ஒருவர் வீட்டை புதிய தொழில்நுட்பம் மூலம் உயர்த்தியிருப்பது தெரியவந்தது.

இதை பார்த்த ஆறுமுகம், தனது வீட்டையும் அதேபோல் உயர்த்துவதற்கு திட்டமிட்டார். இதில் ஹரியானாவை சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் நிறுவனம், வீட்டை இடிக்காமல் உயர்த்தி தருவதற்கு ஒப்பு கொண்டது. 45 நாட்களில் இப்பணிகளை முடிக்க மொத்தம் ரூ.10 லட்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் இருந்து கை தேர்ந்த 25 கட்டுமான ஊழியர்களை இதற்காக அந்நிறுவனம் அழைத்து வந்தது. வீட்டை சுற்றிலும் 300 ஜாக்கி வைத்து ஒரே நேரத்தில் வீட்டை 3 அடிக்கு உயர்த்தியுள்ளனர். தற்போது 50 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது.

மீதி பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர். எப்படி சாத்தியமாகிறது?: கட்டிடத்தை உயர்த்தும் பணி மேற்கொள்வதற்கு முன் தொழில்நுட்ப குழுவினர் முதலில் இடத்தை பார்வையிடுகின்றனர். கட்டிடத்தின் உறுதித்தன்மை, அருகில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்கின்றனர். பின்னர் கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் ஜாக்கிகளை பொருத்துகின்றனர். பழைய அஸ்திவாரத்தை படிப்படியாக அகற்றி ஒரே நேரத்தில் வீட்டை சுற்றிலும் உள்ள ஜாக்கிகளை இயக்குகின்றனர். இதில் நாள் முழுவதும் ஜாக்கி இயங்கினாலும் சென்டி மீட்டர் அளவுக்கு தான் வீடு நகரும்.

உயர்த்தவேண்டிய அளவுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 30 நாட்களில் இருந்து 45 நாட்களாகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.250 முதல் ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கட்டிடம் இடிந்தால் அதற்கான முழு செலவையும் அந்நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. வீட்டுக்கான மின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்படுகிறது. மற்ற பொருட்களும் அகற்றப்படுகின்றன. கதவு, ஜன்னல்கள் அகற்றுவதில்லை. குறிப்பிட்ட உயரத் துக்கு வீட்டை தூக்கியவுடன், அஸ்திவாரத்தில் கான்கிரீட் வைத்து மூடப்படும். ஜாக்கிகள் வெளியில் எடுக்கப்படும்.

Loading...
Rates : 0
VTST BN