வாந்தியை கட்டுப்படுத்தும் இலந்தை பழம்

Loading...

வாந்தியை கட்டுப்படுத்தும் இலந்தை பழம்இலந்தை மர வகையை சார்ந்தது. இதில் நாட்டு இலந்தை, சீமை இலந்தை என இரு வகை உள்ளது. இது சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். இனிப்போடு புளிப்பு சுவை கலந்து காணப்படும். இரண்டு விதமான இலந்தை பழமும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் கொண்டவை. இதன் துளிர் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களிலும் மருத்துவத்தன்மை இருக்கிறது.
இலந்தையின் கொழுந்து இலையை ஒருகைப் பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். 6 மிளகு, 4 பல் பூண்டு ஆகியவற்றை அதனோடு சேர்த்து அரைத்து, மாத விலக்கு ஏற்படும் முதல் இரண்டு நாட்கள் காலை வெறும் வயிற்றில் குடித்தால் கருப்பை மலட்டுத்தன்மை நீங்கும்.
இலந்தை இலையை அரைத்து நாள்பட்ட புண்களில் வைத்து கட்டினால் புண் விரைவில் ஆறும். இலை மற்றும் பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து குளித்தால் கை, கால்களில் ஏற்படும் குடைச்சல், வலி போன்றவை நீங்கும்.
வாந்தி பல்வேறு சூழ்நிலைகளில் நம்மை பாடாய்ப்படுத்தும். பேருந்தில் பயணம் செய்யும்போது சிலர் வாந்தியை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். அஜீரணத்தாலும் வாந்தி வரும். கர்ப்பகாலத்திலும் பெண்களுக்கு வாந்தி வருவதுண்டு. எல்லா வகை வாந்தியை கட்டுப்படுத்தவும், மயக்கத்தை போக்கவும், இலந்தை வடாகத்தை சுவைக்கவேண்டும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள புண் போன்றவைகளை குணப்படுத்தும் ஆற்றலும் இலந்தை வடாகத்திற்கு உண்டு.
இலந்தை பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். மேலும் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுகளும், பிளவனாய்டு, பீனால், சப்போனின் போன்ற தாவர சத்துகளும் இலந்தை பழத்தில் உள்ளது. இவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது.
இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும்.
இலந்தை பழத்தில் உள்ள ‘ஜீஜீபைன்’ மற்றும் ‘ஜீஜீ போசைட்’ போன்ற வேதியியல் சத்துக்கள் மனஅழுத்தத்தை குறைத்து, தூக்கத்தை வரவழைக்கும் சக்தி கொண்டது.
இலந்தை பழம் நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி, உலர்த்தி, கொட்டை நீக்கி பொடி செய்து சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து, அரிசி கஞ்சியில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.
ஒரு தேக்கரண்டி பொடியை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து பருகினால் மன அமைதி, நல்ல தூக்கம் உண்டாகும். முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். இளமையான தோற்றம் கிடைக்கும். சீன மருத்துவத்தில் இலந்தை பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்திலும் இதன் பங்களிப்பு உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply