வறண்ட கூந்தல் மற்றும் எண்ணெய் பசையான கூந்தல்

Loading...

வறண்ட கூந்தல் மற்றும் எண்ணெய் பசையான கூந்தல்ஹேர் ஆயில் மற்றும் ஷாம்பு விளம்பரங்களில் தோன்றுகிற மாடல்களின் கூந்தல் போல அலை அலையான, பட்டுப் போன்ற கூந்தலைப் பெற எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், பலருக்கும் கூந்தல் அப்படி அமைவதில்லை. கூந்தலின் தன்மை என்பது பாரம்பரியத் தன்மையைப் பொறுத்தது. கூந்தலின் வளர்ச்சியில் பாரம்பரியத் தன்மையைத் தவிர, உணவு, பராமரிப்பு போன்றவற்றுக்கும் பங்குண்டு. கூந்தலின் தன்மை என்பது பெரும்பாலும் பரம்பரைத் தன்மையைப் பொறுத்ததே. சுருள் சுருளாக அடர்த்திக்கூந்தலோ, அடங்காத முரட்டுக் கூந்தலோ, சொன்னபடியெல்லாம் கேட்கும் அழகுக் கூந்தலோ… எதுவானாலும் அதன் பின்னணியில் பாரம்பரியத்துக்குப் பெரும் பங்கு உண்டு.
சாதாரணக் கூந்தல், வறண்ட கூந்தல் மற்றும் எண்ணெய் பசையான கூந்தல் என கூந்தல் 3 வகைப்படும். உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை நீங்களாகவே கண்டுபிடிக்கலாம். எப்படி?
தலைக்குக் குளித்ததும் ஈரம்போகத் துடைத்த கூந்தலை 2 நாட்களுக்கு அப்படியே விட்டுவிடவும். அதாவது, அந்தக்கூந்தலில் எண்ணெய் வைக்காமல், மறுபடி தலைக்குக் குளிக்காமல் இருக்கவும். 3வது நாள் உங்கள் கூந்தலைப் பாருங்கள். விரல்களை கூந்தலின் இடையே நுழைத்துக் கோதி விடுங்கள். பிசுபிசுப்புத் தன்மையோ, வறட்சியோ தெரியாமல், கூந்தல் சுத்தமாக இருப்பது போலத் தோன்றினால் உங்களுடையது சாதாரணக் கூந்தல். விரல்களை நுழைத்துப் பார்க்கும் போது, கூந்தல் கரடுமுரடாகக் காணப்பட்டாலும், நகங்களில் வெள்ளைத் துகள்கள் தென் பட்டாலோ, பொடுகு மாதிரி உதிர்ந்தாலோ உங்களுக்கு இருப்பது வறண்ட கூந்தல். கூந்தலில் எந்தப் பொலிவும் இல்லாமல், பளபளப்பே இல்லாமல் காணப்படும்.எண்ணெயே தடவாமல், எண்ணெய் பசை தென்படும். விரல்களில் வெள்ளையான பிசுபிசுப்பான பசைத் தன்மை தெரியும். அப்படியென்றால் உங்களுடைய கூந்தல் எண்ணெய் பசையானது.கூந்தல் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பருவநிலை மாற்றங்களுக்கேற்பவும் கூந்தலின் தன்மை மாறும். குளிர்காலத்தில் வறண்டிருக்கும். வெயில் காலத்தில் எண்ணெய் பசையுடன் இருக்கும்.

சாதாரண கூந்தல் உள்ளவர்கள்…

தினமுமோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ கூந்தலை அலசலாம். சாதாரணக் கூந்தலுக்கான கண்டிஷனர் மட்டுமே உபயோகிக்க வேண்டும். தினமும் 2 – 3 முறை பிரஷ் செய்ய வேண்டும். அது மண்டைப்பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டிவிடும். அளவுக்கு அதிகமாக தலைக்குக் குளிப்பதை தவிர்த்தல் நல்லது. அது அவர்களின் மண்டைப் பகுதியில் உள்ள இயற்கையான எண்ணெயை நீக்கி, சாதாரண கூந்தல் வறண்ட கூந்தலாக மாறக் காரணமாகி விடும்.

வறண்ட கூந்தல் உள்ளவர்கள்…

தலை குளிப்பதிலேயே இவர்கள் கவனம் காட்ட வேண்டும். நன்றாக, சுத்தமாகக் குளிப்பதாக நினைத்துக் கொண்டு நிறைய ஷாம்புவை எடுத்து, தலையில் பரபரவெனத் தேய்த்துக் குளிப்பார்கள் சிலர். அப்படிச் செய்வதன் மூலம் மண்டைப் பகுதியில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி, கூந்தல் மேலும் வறண்டு போகும். சீக்கிரமே கூந்தலின் நுனிகள் பிளவு பட்டு, உடைந்து, உதிரும். தினசரி தலை குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். தலை குளிப்பதற்கு முன் மிதமான ஆயில் மசாஜ் செய்துவிட்டு, வறண்ட கூந்தலுக்கான ஷாம்புஉபயோகித்து கூந்தலை அலசலாம்.எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள்… ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூந்தலை அலசலாம். இவர்களது கூந்தல் சீக்கிரமே பிசுபிசுப்படையும். அதிகப்படியாக சுரக்கும் எண்ணெயை நீக்கும்படி, கூந்தலை முறையாக அலசி சுத்தப்படுத்தாவிட்டால், கூந்தலின் வேர்ப்பகுதிகள் அடைத்துக் கொள்ளும். அதன் தொடர்ச்சியாக தொற்று ஏற்படும். தேவையில்லாமல் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்

சாதாரண கூந்தலுக்கு…

இந்த வகைக் கூந்தலுக்கு அதிக மெனக்கெடல் தேவையிருக்காது. தினசரி கவனிப்பே போதுமானது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தலா 2 டீஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பாக்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் பால் விடவும். உடனே திரிந்த மாதிரி வரும். இந்தக் கலவையை மண்டைப் பகுதியில் வேர்க்கால்களில் படும்படி தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். தண்ணீரில் 10 மருதாணி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் சுத்தமான டவலை நனைத்துப் பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்டிக் கொள்ளவும். மருதாணி இலை, கூந்தலை கண்டிஷன் செய்யும். நான்கைந்து முறை இப்படி டவல் கட்டி எடுத்து, பிறகு வழக்கமாக உபயோகிக்கிற ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகித்து கூந்தலை அலசவும். முதல் நாள் இரவே 1 கைப்பிடி அளவு சீயக்காய், 2 பூந்திக் கொட்டை, 1 டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் சிறிது தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் தலையை அலச ஷாம்பு மாதிரிப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் பசையான கூந்தலுக்கு…

நெல்லிக்காய் எண்ணெய் (ஆம்லா ஆயில்) 2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன், பாதாம் ஆயில் 1 டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்து வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி மிதமான மசாஜ் கொடுக்கவும். 2 டேபிள்ஸ்பூன் மருதாணி விழுது, 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, அரை டீஸ்பூன் துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் பேக் மாதிரிப் போட்டு, அதே விழுதை முடிக் கற்றைகளில் படும்படி நுனி வரை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து அலசலாம்.

வறண்ட கூந்தலுக்கு…

பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், ஹென்னா ஆயில் (மருதாணி எண்ணெய்) 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து வெதுவெதுப்பாக சூடாக்கவும். வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு எவ்வளவு எண்ணெய் வைத்தாலும் உறிஞ்சிக் கொள்ளும். சிறிது எண்ணெயை முடிக் கற்றைகளிலும் நுனி வரை தடவி, பின்னல் போட்டு, ஒரு ரிப்பன் வைத்து மடித்துக் கட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கூந்தலைப் பிரித்து, அதே எண்ணெய் கலவையை மறுபடி விரல்களால் தொட்டு, கோதிவிட்டு, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவல் கட்டி, ஸ்டீம் கொடுக்கவும். சிறிது வேப்பிலை, 1 டீஸ்பூன் வெந்தயம், 1 டேபிள்ஸ்பூன் தயிர் கலந்து தலைக்கு பேக் போட்டு, ஊற வைத்துக் குளிக்கவும். விருப்பமுள்ளோர் முட்டையின் வெள்ளைக் கருவை இதில் கலந்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply