பிரெஞ்ச் கார் நிறுவனம் ரினால்ட்டின் ட்விஸி எலக்ட்ரிக் கார்…ஒரு கண்ணோட்டம்…

Loading...

பிரெஞ்ச் கார் நிறுவனம் ரினால்ட்டின் ட்விஸி எலக்ட்ரிக் கார்…ஒரு கண்ணோட்டம்…புதிய கார்களின் கண்டுப்பிடிப்புகள் பெருகி வரும் காலகட்டத்தில் புதுமையான வடிவமைப்பு கொண்ட கார்களும் வருவதற்கும் தவறவில்லை. மனிதனின் கற்பனைகளுக்கு உயிர்கொடுக்கும் அத்தனை தொழில்நுட்பத்தையும் சாத்தியப்பட வைக்கும் இந்த கால கட்டத்தில் அடுத்த தலைமுறைக்கான கார்களை வடிவமைப்பதில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரெஞ்ச் கார் நிறுவனமான ரினால்ட் தனது சொந்த மண்ணில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் புதுமையான வடிவமைப்பு கொண்ட எலக்ட்ரிக் கார்தான் ட்விஸி.

பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60யின் சைஸில் இருந்தாலும் பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் வகையில் பேன்ஸியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரினால்ட்டின் ப்ளூயன்ஸ் இசட்இ, கங்கூ இசட்இ ஆகிய எலக்ட்ரிக் கார் வரிசையில் வந்துள்ள இந்த ட்விஸி இசட்இ எலக்ட்ரிக் கார், கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக இந்தியாவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே ஆட்டோமொபைல் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது இந்த கார்.

நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு சிறந்த தீர்வு காணும் நோக்கில் மிக நேர்த்தியாக 1.2 மீட்டர் மட்டுமே அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட ட்விஸியின் இருக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே சந்து பொந்துகளிலும் ட்விஸியை வைத்து ஓட்ட‌ முடியும். 100கிலோ பேட்டரியின் எடையையும் சேர்ந்த இந்த காரின் மொத்த எடையே 450 கிலோதான். இந்த எலக்ட்ரிக் காரில் அதிக ஆற்றல் வாயந்த லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. 3 மணிநேரம் சார்ஜ் செய்தால் 80 கிமீ முதல் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறது ரெனோ.

கோல்ப் கார்ட் கார் போன்று இருக்கும் இந்த காரில் மேற்ப்பகுதி அழகாக பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், பக்கவாட்டில் கதவுகள் இல்லை. ஏசியும் இல்லை. ஓசி காற்றை வாங்கிக் கொண்டு சுகமாக பயணிக்க வேண்டியதுதான். ஷாப்பிங் செய்யும்போது ஓரளவு பொருட்களை வைக்கும் அளவுக்கு 31 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது.

முழுக்க முழுக்க எலக்ட்ரிக் காரான இதில் பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் பெடல்கள் இருக்கின்றன. இந்த காரின் சக்கரங்கள் சற்று வெளியில் துருத்தி கொண்டு இருக்கின்றன. அதுவும் இந்த காருக்கு ஓர் அழகுதான் என்று கூறலாம். டிரைவரை பாதுகாக்கும் ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன.

4கேவி எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் அதிகபட்சம் இந்த கார் மணிக்கு 80 கிமீ வரை செல்லும். டிராக்டரில் உட்கார்ந்து ஓட்டுவது போன்று காரின் நடுவில் உட்கார்ந்து ஓட்டும் வகையில் இருப்பதால், டிரைவிங் தெரியாதவர்கள் கூட ஒரு சில மணி நேர பயிற்சிக்குப் பின். எளிதாக ஓட்டலாம்.

சில ஐரோப்பிய நாடுகளில் இந்த காரை ஓட்டுவதற்கு லைசென்ஸ் கூட தேவையில்லை. வரிகள் உட்பட இந்த கார் ஐரோப்பாவில் ரூ.4.65 லட்சம் விலையில் (ஐரோப்பிய நாடுகளில் எலக்ட்ரிக் கார்களுக்கு வரிச் சலுகைகள் உண்டு)விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்த காரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ரினால்ட் தெரிவிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply