“உயிரை குடிக்கும் புகை” -அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்களுடன்

Loading...

“உயிரை குடிக்கும் புகை” -அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்களுடன்தீங்கான செயல்களும் உலகில் ஒரு செல்வாக்கோடு அங்கம் வகிக்கிறது என்றால், அதில் முதலில் இருப்பது புகைப்பழக்கம் தான்.
சிகரெட் ஒரு வெண்ணிற சுருட்டு, அதன் ஒருமுனையில் சிறுநெருப்பு இருக்கிறது. மறுமுனையில் பெரிய முட்டாள் இருக்கிறான் என்றார் ஒரு அறிஞர்.

புகைப்பழக்கம் தீங்கானது. புகையிலை புகை, உடலில் உறுப்புகளின் செயல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கிறது. இது அரசு மற்றும் சமூக ஆர்வலர்களாலும் பல காலமாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆனாலும், புகைப் பழக்கத்தையும் நிறுத்த முடியவில்லை, அதன் தீங்கினால் ஏற்படும் நோய்களையும் மரணங்களையும் தடுக்க முடியவில்லை.

சிகரெட்டுக்கு மாற்றாக, சிகர், பைப், ஹூகா என எந்த முறையில் புகையிலை தொடர்பான பொருள்களை பயன்படுத்தினாலும் அது உடலுக்கு தீராத தீங்குதான்.


சிகரெட் புகையில் ஏழாயிரம் ரசாயனங்கள்

சிகரெட்டில் 6000 பொருள்கள் அடங்கியுள்ளது. அது புகைக்கப்படும் போது, 7000 க்கும் அதிகமான ரசாயனப் பொருள்களை உருவாக்குகிறது என The American Lungs Association தெரிவிக்கிறது.

அதில் பெரும்பாலனது உடலுக்கு தீங்கானதுதான். அதிலும் 69 இரசாயனங்கள் குறிப்பாக புற்றுநோய்க்கு காரணமானது என்றும் அது புகையிலையை எந்த முறையில் பயன்படுத்தினாலும் வரக்கூடியது என்றும் கூறுகிறது.

National cancer Institute சிகரெட்டை விட, சிகார்ஸ், பைப், ஹூகா போன்றவையே புற்றுநோயை தீவிரப்படுத்துகிறது என கண்டுபிடித்துள்ளது.

சிகரெட்டை விட ஹூகா புகைக்கும் போதுதான், அதிக புகை உள்ளிழுக்கப்படுகிறது. ஹூகாவில் அதிக கார்பன் மோனாக்ஸைடும் விஷத்தன்மையான இரண்டாம் கட்ட புகையும் விளைகிறது.

அமெரிக்காவில் Centers for Disease Control and Prevention எடுத்த இறப்பு விகித கணக்குப்படி, புகைப்பழக்கத்தால் இறப்பவர்கள் எண்ணிக்கை, புகைப்பழக்கம் இல்லாமல் இறப்பவர்கள் எண்ணிக்கையைவிட மூன்று மடங்காக இருக்கிறது. அதனால் மரணத்தை தடுப்பதற்கான காரணங்களில் புகை பழக்கமே முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது.


உறுப்புகளை உருக்குலைக்கும் புகை

உடலில் உறுப்புகளின் செயல்பாடு ஒன்றோடொன்று தொடர்புடையது. அந்த செயல்முறை அமைப்புகள், இந்த பழக்கத்தால் எப்படி பாதிக்க்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.


Central Nervous system

புகையிலையில் உள்ள நிகோடின் மனநிலையை பாதிக்கும் ஒரு மருந்து. புகைத்த சில வினாடிகளிலே நிகோடின் நேரே சென்று மத்திய நரம்பு மண்டலத்தை அடைகிறது.

அதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அது ஒரு ஆரோக்கிய அடிப்படையில்லாத விளைவு என்பதால், அடுத்து உடனே சோர்வு ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது. அதுவே பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.

நம் உடலில் அழுத்தத்துக்குரிய Corticosterone ஹார்மோன், நிகோடினால் ஏற்படும் விளைவை குறைக்கிறது. அதனால், மீண்டும் பழைய உற்சாக அளவுக்கான நிகோடினை பெற, புகைக்க தூண்டப்படுகிறீர்கள்.

உற்சாகத்தை திரும்பப்பெற, புகைத்து நிகோடின் அளவை அதிகரிப்பது. அறிவை முடக்குகிறது. நிதானத்தை தடுமாற வைக்கிறது. செயலில் கோபம் வெறுப்பு, மன அழுத்தம் போன்ற அதிகப்படி உணர்ச்சிகளை கொண்டுவருகிறது.

புகைப்பழக்கத்தினால், கண்பார்வை மங்குகிறது. ருசியும் பசியும் மந்தமடைகிறது. மணம் உட்பட சகல நுகர்ச்சி நுட்பமும் ஒடுங்குகிறது. தலைவலி, தூக்கமின்மை பிரச்சினைகளும் ஏற்படுகிறது.


Respiratory System

புகை உள்ளிழுக்கப்படுவதால் அதில் உள்ள ரசாயனப் பொருள்கள் நுரையீரலை சேதப்படுத்துகிறது. இதனால் நுரையீரல் தனது வடிகட்டும் தன்மையை இழக்கிறது.

சாதரண இருமலால், புகையில் உள்ள ரசாயனங்கள் முழுதாக உடலைவிட்டு வெளியேறுவதில்லை. அது அப்படியே நுரையீரலில் தங்கி, சேர்ந்து நாசப்படுத்துகிறது.

இதனால், புகைபிரியர்களுக்கு எளிதாக தொற்றுநோய், ஜுரம், ஜலதோஷம் போன்றவையும் அடிக்கடி ஏற்படுகிறது.

புகைபிடிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் இருமல், சளி, வீசிங், நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற நோய்களினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.


Cardiovascular System

புகையிலை புகையால் இருதய அமைப்பும் பாதிக்கப்படுகிறது. நிகோடின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உயர்த்துகிறது. அதனால் தற்காலிக உற்சாகம் ஏற்படுகிறது. மேலும், நிகோடின் அதிகரிப்பால் ரத்தகுழாய்கள் இறுக்கமடைகின்றன. அதனால், ரத்த ஓட்டத்திற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது.

சீரற்ற ரத்த ஓட்டம் இதயம் மற்றும் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவுகளையும் ரத்தக்கட்டிகளையும் ஏற்படுத்தி ரத்தக்குழாய்களில் அடைப்பையும் ஏற்படுத்துகிறது. இது ரத்தப்புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற பெரிய நோய்களுக்கு கதவு திறக்கிறது.


Skin, Hair, Nails (Integumentary system)

புகைப் பழக்கத்தால் தோல் பொலிவை இழக்கிறது. நிறம் மாறுகிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயோதிக தோற்றத்தையும் தருகிறது.

பற்களில் எப்போதும் கறுப்பு, மஞ்சள் கலந்த கறைபடிந்திருக்கும். நகங்களும் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தில் ஆரோக்கியமற்று காணப்படும்.

தலைமுடி வறட்சியாகவும், புகையிலை துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கும்.


Digestive System

புகைப் பழக்கம் வாய்வழிப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. நோய் தொற்றுகளால் பல் ஈறுகளில் வீக்கம் ஏற்படுகிறது. அதனால், வாய் துர்நாற்றம் வீசுகிறது.

பற்சிதைவு, பல் இழப்பும் ஏற்படுகிறது. வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய் உறுப்புகளிலும் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

சிறுநீரகம், கணையம் போன்ற உறுப்புகளிலும் புகைப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் விகிதம் அதிகம். சிகார்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு புகையை உள்ளிழுக்காவிட்டாலும் வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம்.

உணவின் சர்க்கரை ஜீரணிக்க காரணமான இன்சுலின் சுரப்பிலும் புகைப்பது சிக்கலை ஏற்படுத்தி, நீரிழிவு நோய் வர காரணமாகிறது. நீரிழிவு வந்தபிறகும், புகைக்காதவர்களைவிட புகைப்பவர்களுக்கு இருமடங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

எடுத்துக்கொள்கிற ஊட்டச்சத்துக்கள் எல்லாம் புகையிலையில் உள்ள ரசாயனங்களால் சிதைக்கப்படுகிறது. அதனால், போதுமான சத்து உடலில் சேர்வதில்லை. அதன் விளைவாக பசியின்மை தழ்வுமனநிலை, குமட்டல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.


Sexuality and Reproductive System

புகைப்பழக்கம் சீரான ரத்த ஓட்டத்தை பாதிப்பதால், பாலின உறுப்புகளில் உணர்ச்சி, விறைப்புத்தன்மை குறைகிறது. இதனால், உயிரணுக்கள் உற்பத்தியும் குறைகிறது. தாம்பத்ய வாழ்வில் மந்தநிலை ஏற்படுகிறது.

சராசரி மனிதர்களைப்போல சிறந்த உச்சநிலை அடையமுடியாததால், மலட்டுத்தன்மை அதிகரித்து கருத்தரிப்பதிலும் சிக்கலை உருவாக்குகிறது.

பெண்களுக்கு கருச்சிதைவு நஞ்சுக்கொடி பிரச்சினைகள், குறைபிரசவம் போன்ற கர்ப்பகால பிரச்சினைகளும் புகைப்பதால் ஏற்படும்.

பிறக்கும் குழந்தை எடைகுறைந்து காணப்படும், திடீர் குழந்தை இறப்பும் நேரலாம். கர்ப்பிணி புகைப்பதால், அந்த புகை குழந்தையாலும் இரண்டாம் கட்ட உள்ளிழுப்பு செய்யப்படும். இது குழந்தைக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவைக்கிறது.

புகைப்பழக்கம் உள்ள பெண்கள், மற்ற பெண்களைவிட குறைந்த வயதில் பருவமடைகின்றனர். இந்த பழக்கத்தால் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஆபத்தும் அதிகரிக்கிறது.


மனஅழுத்தத்திற்காக அழிவிடம் தஞ்சமா?

மனிதர்களின் தேவைக்கு போதுமான சக்தியை உடலில் இயற்கை கொடுத்திருக்கிறது. அதை முறையான உணவுகள், சரியான உடற்பயிற்சிகள், மற்றும் மகிழ்ச்சியோடு மனதை வைத்துக்கொள்ளும் ஞானம் இருந்தாலே போதுமானது.

உலகத்தில் பெரும்பாலானவர்கள் உடல், மனதை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் புகை, மதுவில் உள்ள ஒரு தற்காலிக உற்சாகத்தை, மயக்கத்தை பெறுவதற்கு தொடர்கிறார்கள். பிறரையும் அந்த அரைவேக்காட்டு அறிவை கற்பித்து கெடுக்கிறார்கள்.

அதிக சக்தியை பெறுவதாகவும் மனஅழுத்தத்துக்கு மாற்றாகவும் இதை பழகுகிறார்கள்.

அதிகவேலை பளு ஒரு தவறு, வெறுப்பேற்றும் அணுகுமுறைகள் அதைவிட பெரிய தவறு. அந்த, சிறிய துன்பத்திற்காக பெரிய துன்பத்தில் தஞ்சமடையும் செயலான புகைப்பழக்கம் அழிவு நோக்கிய பயணம்.

புகைப்பழக்கத்தை விடமுடியாத கொழைகள், விரக்தியில், வாழ்க்கையே நிரந்தரமில்லாதது தானே என, மேதாவிதனமாய் நியாயப்படுத்திக்கொள்வது வீழ்ச்சிக்கு தாயாரான பலவீன மனநிலையே.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply