அம்மா ரெசிப்பி; சுண்டைக்காய் பச்சடி! பச்சடிகள் பலவிதம்!!

Loading...

அம்மா ரெசிப்பி; சுண்டைக்காய் பச்சடி! பச்சடிகள் பலவிதம்!!ரொம்ப குறைவான பொருட்களை வெச்சு, சுலபமாகவும் சுவையாகவும் சமைக்க முடியும்கிறதுதான் எங்க செட்டிநாட்டு சமையலோட சிறப்பு அம்சமே. இந்தப் பச்சடியும் அப்படித்தான். பொதுவா, பச்சடின்னாலே தயிர்ப் பச்சடி’தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, செட்டிநாட்டு சமையலில் பச்சடின்னா, பருப்பு சேர்த்துச் செய்ற கூட்டு மாதிரியான பதார்த்தம். சுண்டைக்காய் பச்சடி, சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு ரொம்ப நல்லது. சாதத்தில் போட்டுப் பிசைஞ்சு குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றில் இருக்கிற பூச்சியெல்லாம் அழிஞ்சிடும்” என்கிற சென்னையைச் சேர்ந்த மீனா மணிவண்ணன் செய்து காட்டிய சுண்டைக்காய் பச்சடி இங்கே…

தேவையானவை: பிஞ்சுச் சுண்டைக்காய் ஒரு கப், துவரம்பருப்பு அரை கப், சின்ன வெங்காயம் 10, தக்காளி 1, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, புளி சிறு கோலிக்குண்டு அளவு, உப்பு ருசிக்கேற்ப, சாம்பார்தூள் 2 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, கறிவேப்பிலை 6 இலைகள்.

செய்முறை: சுண்டைக்காயைக் கழுவி, காம்பு நீக்கி, இரு துண்டுகளாக நறுக்கவும் (மோர் கலந்த தண்ணீரில் போட்டால், காய் கறுக்காமல் இருக்கும்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பருப்பை குக்கரில் வைத்து, பெருங்காயம், மஞ்சள்தூள், அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, வேகவைத்து இறக்கவும். புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைக்கவும். கடாயில், சிறிது எண்ணெய் விட்டு, சுண்டைக்காயைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும். பச்சை வாசனை போய், நிறம் மாறி வதங்கியதும், ஒரு தட்டில் எடுத்துவைக்கவும். பிறகு, சிறிது எண்ணெயில், தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, சுண்டைக்காயையும் கொட்டிக் கிளறி, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறிது வற்றியதும், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கவும்.

சித்த மருத்துவர் பத்மபிரியா: சுண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இது ஒற்றைத் தலைவலியைப் போக்கும். வயிற்றில் இருக்கும் அமீபியா முதலானவற்றை மலம் வழியே வெளியேற்ற சுண்டைக்காய் உதவுகிறது. இதனால் வயிறு சுத்தமாகும். குளிர்காலங்களில் இது போன்ற பச்சடிகளை அடிக்கடி செய்து சாப்பிடுவது நல்லது. ஆஸ்துமா, காய்ச்சல் வராமல் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply