புதியவகை வலி நிவாரணியை சோதித்தபோது நிகழ்ந்த விபரீதம்: மூளைச்சாவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

Loading...

புதியவகை வலி நிவாரணியை சோதித்தபோது நிகழ்ந்த விபரீதம்மருத்துவ பரிசோதனையில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தால் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் உள்ள ‘Biotrial’ என்ற மருந்து பரிசோதனை ஆய்வகத்தில் ‘Bial’ என்ற போர்த்துகீசிய நிறுவனத்திற்காக ஆய்வு நடந்துள்ளது.

இந்த ஆய்வில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வலி நிவாரணி ஒன்றை, தன்னார்வத்துடன் சோதனையில் கலந்து கொண்ட 6 பேருக்கு வழங்கியுள்ளனர்.

அந்த 6 பேருக்கும் சனவரி 7ம் திகதி அந்த வலி நிவாரணியை அளித்து சோதனையை தொடங்கியுள்ளனர்.

அவர்களின் வயது 28 முதல் 49 வரை இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அந்த 6 நபர்களில் ஒருவருக்கு இடது பக்க மூளை இறந்து விட்டதால் உயிரிழந்துள்ளார்.

மீதி 5 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த 5 பேரில், மூவருக்கு ஈடுசெய்ய முடியாத நிலையில் ஊனம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரிசோதனையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்யவே முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய மருந்தின் பாதுகாப்பை மதிப்பிட நடந்த முதற்கட்ட சோதனைக்காக நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்த தன்னார்வலர்களையே தெரிவு செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் அந்த வலிநிவாரணியை உட்கொண்ட பின்பு தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதற்கு முன் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும் பிரான்ஸ் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புதிய வலி நிவாரணி இதுவரை சிம்பென்ஸி வகை குரங்குகளிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 தனி விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணம், சோதனை முறையில் ஏற்பட்ட தவறாலா? அல்லது பயன்படுத்திய மருந்து தான் காரணமா? என விசாரணை நடத்தவுள்ளனர்.

Biotrial பொது இயக்குனர் Francois Peaucelle, இந்த சோக சம்பவத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு புதிய மருந்து சந்தைக்கு வருவதற்கு முன் 3 கட்டங்களாக சோதனை செய்யப்படும்.

முதற்கட்டத்தில் சில தன்னார்வலர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு சோதிக்கப்படும்

பின்னர் 2ம், மற்றும் 3ம் கட்ட சோதனையில், பல்லாயிரம் பேருக்கு மருந்து வழங்கப்பட்டு அதன் தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது வழக்கம்.

இந்நிலையில், முதல் நிலை சோதனையிலேயே இந்த மருந்து ஒரு மனித உயிரை பலி வாங்கியுள்ளது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN