வரகரிசி உலர்பழ கேக்

Loading...

வரகரிசி உலர்பழ கேக்
தேவையானவை:

வரகரிசி மாவு – 150 கிராம்
கோதுமை மாவு – 150 கிராம்
வெண்ணெய் (உப்பு இல்லாதது) – 100 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
பால் – 200 மில்லி
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
ஃப்ரூட் மிக்ஸ்டு எசென்ஸ் – 1 டீஸ்பூன்
உலர்பழங்கள் – அரை கப் (திராட்சை, டூட்டி, அத்தி, பேரீச்சை)
முட்டை – 5


செய்முறை:

வரகரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இறுத்து வெயிலில் லேசாக உலர்த்தி எடுக்கவும். முழுவதும் காய்ந்து விடாமல் லேசாக ஈரப்பதம் இருக்கும்போதே எடுத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் வரகரிசியை ஈரம் உலரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும். அதிகம் வறுத்து விடவேண்டாம். இதனை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்து வைக்கவும். இனி வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடரை ஒன்றாகக் கலந்து நன்கு சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும். பின் இதனுடன் முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து ஊற்றி, நன்றாகப் பொங்கி வரும் வரை அடிக்கவும். இப்படிச் செய்யும்போது சர்க்கரை முழுவதும் கரையும். இத்துடன் பாலைச் சேர்த்து நன்றாகக் கலக்கி விட்டு சலித்து வைத்துள்ள மாவுகளை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இப்போது எசென்ஸை இதில் ஊற்றி, தனியாக வைத்து விடவும். ஒரு கிண்ணத்தில் உலர் பழங்கள், கால் ஸ்பூன் வெண்ணெய், ஒரு சிட்டிகை வரகரிசிமாவு போட்டு உலர்பழக் கலவையை ரெடி செய்து, அதில் பாதியளவு கேக் மாவுடன் கலந்து கலக்கிவிட்டு மீதியை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இவை எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன் கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். (பாத்திரத்தின் மீது எண்ணெய் மற்றும் கோதுமை சேர்ப்பதால், கேக் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளாமல் அழகாக வந்து விடும்). இப்போது கேக் மாவு மிக்ஸை இந்தப் பாத்திரத்தில் கொட்டி மீதமுள்ள உலர்பழங்களை மேலே தூவிவிடவும். கேக் பாத்திரத்தை தரையில் லேசாக தட்டி, மாவின் அளவை ஒரே அளவில் இருக்குமாறு சமன்படுத்தி விடவும். இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்தால், அசத்தலான சுவையுடன் வரகரிசி உலர்பழ கேக் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply