ஊட்டச்சத்து மிக்க வாழைப்பழத்தோல்

Loading...

ஊட்டச்சத்து மிக்க வாழைப்பழத்தோல்வாழைப்பழத் தோல் வழுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான்’ என்றொரு ‘நா சுழற்றி’ வாக்கியத்தைப் படித்திருப்பீர்கள். ஆனால் அந்த ஏழைக் கிழவன் ஏன் வழுக்கி விழுந்தான் என்று யோசித்து பார்த்தால் வாழைப்பழத் தோலை குப்பைத்தொட்டியில் போடாமல் நடைபாதையிலே போட்ட காரணத்தால் தான் என்பது சிறுபிள்ளைக்கும் விளங்கும்.

ஆனால் மிகவும் சுவாரசியமாக, வாழைப்பழத் தோலை நாம் சாப்பிடாமல் குப்பைத்தொட்டியிலே போட்டாலும் நமக்கு பெரிய நஷ்டம்தான் என்கிறார் அமெரிக்காவிலுள்ள சான்டியாகோ நகரைச்சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான லாரா ப்ளோரெஸ்! அட அப்படியா? என்று நாம் ஆச்சரியப்படும் முன்பே, அதெப்படி என்பதை பின்வருமாறு விளக்குகிறார் லாரா. வாழைப்பழமானது இனிப்பாகவும் மிருதுவாகவும் இருக்க அதன் தோலானது தடிமனாக, நார்ச்சத்து நிறைந்ததாக ஆனால் கொஞ்சம் கசப்பாக இருக்கும்.

முக்கியமாக, ஒரு வாழைப்பழம் முழுமையாக முற்றும்போதுதான் அதன் தோல் மெலிதாகவும் மேலும் இனிப்பாகவும் மாறுகிறதாம். அதற்கு எத்திலீன் எனப்படும் இயற்கையான தாவர ஹார்மோன் தான் காரணமாக இருக்கிறது. வாழைப்பழத் தோலில் இருக்கும் கடினமான பல்வேறு சர்க்கரைகளை எளிமையான சர்க்கரைகளாகவும், வாழைப்பழத்தை உறுதியாக வைத்திருக்கும் பெக்டின் எனப்படும் நார்ச்சத்தை உடைப்பதன் மூலம் வாழைப்பழத்தையும் சுலபமாக உடைந்துவிடும்படி மாற்றுவது ஆகியவை எத்திலீன் ஹார்மோனுடைய வேலைதான் என்பது குறிப்பிடத்தக்கது!

முக்கியமாக, தினசரி நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பல்வேறு ஊட்டச்சத்துகளின் மொத்த அளவுகளில் வாழைப்பழத்தில் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு இருக்கிறது என்பது ஆய்வு செய்யப்பட்டு பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது. நம் செரிமானத்துக்கு உதவும் தினசரி நார்ச்சத்தில் 12 சதவீதம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் சி அளவில் 17 சதவீதம், நாம் உட்கொள்ளும் உணவை ஆற்றலாக மாற்றும் திறன்கொண்ட வைட்டமின் பி6 அளவில் 20 சதவீதம், உடலிலுள்ள உயிரணுக்கள், திசுக்கள் மற்றும் உடல் பாகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவும் பொட்டாசியம் 12 சதவீதம், உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும் மெக்னீசியம் 8 சதவீதம் இருக்கிறதாம்.

ஆனால் மிகவும் சுவாரசியமாக, வாழைப்பழத்துடன் சேர்த்து அதன் தோலையும் உட்கொண்டால், அதிலிருக்கும் அதிக அளவிலான வைட்டமின் பி 6 மற்றும் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம், அதனுடன் சேர்த்து கொஞ்சம் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை அனைத்தும் இலவச இணைப்பாக உடலுக்கு கிடைக்கும் என்கிறார் லாரா.

அதெல்லாம் சரி, வாழைப்பழத் தோலை எப்படி உண்பது என்று கேட்டால், ஸ்மூதி எனப்படும் குளிர்பானமாக அல்லது எண்ணெயில் பொரித்து, அவித்து அல்லது குறைந்தது பத்து நிமிடங்கள் வரை வேக வைத்து இப்படி ஏதாவது ஒரு வகையில் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் கண்ணும் கருத்துமாக கேட்டுவிட்டு ‘ஐயய்ய….என்னதான் ஊட்டச்சத்து இருந்தாலும் வாழைப்பழத் தோலை எப்படிச் சாப்பிடுவது?’ என்று கேட்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு வகையில் வாழைப்பழத் தோலை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply