ஆபாச பாடல் விவகாரம்: ஐகோர்ட்டில் சிம்பு புதிய மனு

Loading...

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த டிசம்பர் மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த பாடலுக்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களை நடத்தியது. இதுகுறித்து மாதர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிம்பு, அனிருத் ஆகியோருக்கு சம்மனும் அனுப்பியிருந்தனர். அதே போல, பால் முகவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீசாரும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கிற்கும் சிம்பு, அனிருத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த 2 வழக்குகளிலும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அவர் மீது பதிவான வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பதால், அவரது மனுவை முடித்து வைத்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்போது, வழக்கு விசாரணைக்காக கோவை மற்றும் சென்னை போலீசார் முன்பு நடிகர் சிம்பு ஜனவரி 29–ந் தேதிக்குள் நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஒரே குற்றத்துக்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

பீப் பாடல் பாடியதற்காக என் மீது சென்னை மற்றும் கோவை போலீசார் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஒரே குற்றத்துக்காக இரண்டு வழக்குப்பதிவு செய்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது.

எனவே, இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்காக கோவை மற்றும் சென்னை போலீசார் முன்பு நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டது தவறு. எனவே ஜனவரி 29ந் தேதிக்குள் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவை மாற்றியமைக்கவேண்டும். ஏதாவது ஒரு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக கால அவகாசம் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply