கண் புரை நோய்

Loading...

கண் புரை நோய்கண்புரை (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுறுவுத்தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை, என்று இரு பொருள் கொள்ளலாம். கண்புரைகள் தன் இயல்பு-நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை; இவை விழித்திரையில் (retina) வீழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலமை ஆகும்.அச்சமயத்தில் அவர்களின் கிட்டப்பார்வை கூடுதலாகி கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறையும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை (பெரும்பாலும்) பெரியளவு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை-பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம்.[1] இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.[2] இந்தியாவில் பார்வைக்குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம். இதில் 63 விழுக்காடு பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். [3] வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை (senile cataract) முதலில் சற்று ஒளிபுகாத்தன்மையுடன் துவங்கி, வில்லை பெருத்து பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது.[4] தவிர மார்காக்னிய கண்புரை (Morgagnian cataract) கண்வில்லையின் புறப்பகுதி (cortex) பால் போன்ற திரவமாக வகையில் மாறி தடிப்பை உண்டாக்கும்; இதனால் கண்வில்லையின் உறை உடைபட்டு வழியலாம். சரியாக சிகிட்சை அளிக்கப்படாவிட்டால் குளுகோமா என்ற கண் நோய் உருவாகிட காரணமாக அமையும். சில முதிர்ந்த கண்புரையில் வில்லையை இணைத்திருக்கும் தசைநார்கள் உள்ளேயோ வெளியேயோ இடம் பெயரலாம். அவ்வாறு தானாகவே வெளியே நகர்ந்தால் ஓரளவு ஒளி உட்புகுமாதலால் அதனை இறைவனின் வரமாக பழங்காலத்தினர் கருதினர். ஆங்கிலத்தில் இதன் பெயரான காடராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது முத்து (pearl,pearl eyed) என்று அழைக்கப்படுகிறது கண்புரை முதிர்ந்த நிலையில் பார்வை முற்றிலும் குறைபடுகிறது. துவக்க காலங்களில் கண்பார்வையில் சற்றே திறன் குறைந்து வெளிச்சமான பொருட்களைக் காண்கையில் கண் கூசும். இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்வரும் வாகனங்களின் ஒளியால் அவதியுறுவர். ஒளிமாறுபாடுகளைக் கண்டறியும் திறன் பாதிக்கப்படும். இதனால் நிழல்கள், வண்ண மாற்றங்கள், வரிவடிவங்கள் காண்பது கடினமாகும். இந்த அறிகுறிகளைக் காணின் கண்மருத்துவர் ஒருவரை நாடுதல் வேண்டும். நகரப்பகுதிகளில், சர்க்கரைநோய் போன்ற காரணிகளால் புரை தோன்ற வாய்ப்புகள் உள்ளவர்கள் தெருவிளக்கினைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் கண்டால், அதிலும் ஒரு கண்ணில் மட்டும், கண்மருத்துவரை நாடுதல் மிகவும் தேவையாகும். கண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றன: புற ஊதாக்கதிர்களுக்கு நெடுங்காலமாக கண்ணை வெளிப்படுத்துவது சர்க்கரை நோயின் தாக்கம் இரத்த அழுத்த நோயின் தாக்கம் பயங்கரமான அடி இவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும். தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். ஐசுலாந்து விமான ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வணிக விமானங்களை ஓட்டுபவர்களிடம் கண்புரை வர மற்றவர்களை விட மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வான்வெளியில் அவர்கள் கூடுதல் கதிர்வீச்சிற்கு எதிர்படுவதால் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.[6] இதேபோல அகச்சிவப்புக் கதிர்களுக்கு எதிர்பட்ட கண்ணாடி ஊதுபவர்கள் போன்றோரும் இதே போன்ற வாய்ப்பினைக் கொண்டுள்ளனர். நுண்ணலை கதிர்களும் கண்புரை வரக் காரணமாகும். ஒவ்வாமை நிலைகளும் சிறுவர்களிடையே புரைநோய் வரக் காரணமாக அமைந்துள்ளது.[7] கண் புரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வளர்ந்து கொண்டோ அல்லது நிலையாகவோ, மென்மையாகவோ அல்லது வலிதாகவோ இருக்கலாம். ஸ்டீராய்ட் போன்ற சில மருந்துகளும் கண்புரை தோன்றக் காரணிகளாக அமைகின்றன.[8] கண்புரை மையப்புரை (nuclear), புறத்துபுரை (cortical), முதிர்ந்த புரை (mature), மிகமுதிர்ந்த புரை (hypermature) என வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்த் வெளிப்புறப் புரை (பெரும்பாலும் மருந்துகளால்)[8][9]) மற்றும் உட்புறப் புரை (பெரும்பாலும் வயதானவர்களிடையே) எனவும் பிரிக்கப்படுகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply