நெய் மைசூர்பாகு

Loading...

நெய் மைசூர்பாகுகடலை மாவு – 600 கிராம்
தெளிவு நெய் – ஒன்றே முக்கால் லிட்டர்
சீனி – ஒன்றே முக்கால் கிலோ
தண்ணீர் – அரை லிட்டர்

நெய் மைசூர் பாகு என்று பெயர் சொல்லியாயிற்று. எனவே இதில் நெய்தான் பிரதான மூலப் பொருள். இந்த மைசூர் பாகு செய்வதற்கு சாதாரண நெய் (கெட்டியாக உள்ளது) சரிவராது. தெளிவு நெய் என்று கேட்டு வாங்க வேண்டும். எண்ணெய் போன்று இருக்கும். நல்ல தரமான நெய்யாக வாங்கிக் கொள்ளவும். சாதாரண மைசூர்பாகினை சூடாக்கின எண்ணெய், டால்டா கொண்டு செய்வார்கள்.

முதலில் சற்று அடிக்கனமான, அகன்ற வாணலியில் (இரும்புச் சட்டிதான் நன்றாக இருக்கும்) சீனியைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். தண்ணீர் அதிகம் தேவையில்லை. சீனி கரைந்தால் போதுமானது.

சீனிக் கரைசல் அடுப்பில் இருக்கும் போதே, கடலை மாவினை சலித்து கட்டிகள் இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவும் நல்ல தரமாக இருக்கவேண்டும். பாகு ஒரு கொதி வந்தவுடனே கடலை மாவை பாகில் கொட்டவும். சீனி முழுவதும் கரைந்து இருக்க வேண்டும்.

அவ்வளவுதான். இனி கிளறவேண்டும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் சீனிக் கரைசலுடன் கடலை மாவு சேரும்படி நன்றாக கிளறிக் கொள்ளவும். மாவு கட்டிப் பிடிக்காமல் இருக்க வேண்டும்.

பிறகு எடுத்து வைத்துள்ள நெய்யில் மூன்றில் ஒரு பங்கு ஊற்றி நன்கு கிளறவும். கைகளுக்கு ஓய்வில்லாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதில்தான் எல்லாமே அடங்கியுள்ளது.

ஓரங்களை எல்லாம் வழித்து விட்டவாறு கிளறவும். வாணலியின் எந்த இடத்திலும் மாவு ஒட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. ஐந்து நிமிடம் கிளறியதும் மீதம் உள்ள நெய்யில் பாதியை ஊற்றிக் கிளறவும். தொடர்ந்து விடாது கிளறவும்.

மிகவும் மஞ்சள் நிறமாக இருந்த மாவு சற்று நிறம் மாறி வரும். ஓரம் ஓட்டுவது போல் இருந்தால், ஓரங்களில் சிறிது நெய் ஊற்றி தொடர்ந்து கிளறவும்.

மாவு சற்று கெட்டியாக தொடங்கியவுடன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கிளறவும். மாவு திரண்டு அல்வா பதத்திற்கு வரும். அதன் பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும். சுமார் 15 ல் இருந்து 20 நிமிடங்கள் கிளறிய பிறகுதான் இந்த பக்குவம் வரும்.

அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு மாவினை வழித்து ஒன்று சேர்க்கவும். மேலே சிறிது நெய் விடவும்.

ஒரு ட்ரேயில் உள்புறம் முழுவதும் நெய் தடவி, அதில் தயாரித்து வைத்துள்ள மைசூர்பாகு மாவினை கொட்டி, அழுத்தாமல், பரப்பி விடவும். ஓரங்களில் நெய் ஊற்றி, ஓரத்தினை மட்டும் லேசாக அழுத்திவிடவும்.

இதனை அப்படியே ஒரு நாள் வைத்திருக்கவும். அப்போதுதான் மாவு சற்று கெட்டியாகி, நாம் விரும்பும் பதம் கிடைக்கும். மறுநாள் எடுத்து அதனை துண்டங்கள் போடவும்.

நீங்கள் விரும்பிய நெய் மைசூர்பாகு இப்போது தயார். சுவைத்துப் பாருங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply