திருமணத்திற்கு முன்பு…

Loading...

திருமணத்திற்கு முன்பு...திருமணம் நிச்சயித்த பிறகு… திருமணப் பொண்ணு தன் அழகில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு…

முகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து… முகப்பரு, படை, கரும்புள்ளிகள் போன்றவை நீங்க சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் வீதம் தொடர்ந்து ஆறு வாரங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் முகம் பளீச் என்று மாறிவிடும். கருப்பான முகமும் நிறம் மாறி காணப்படும். “ஆரஞ்சு கால்வானிக்” மசாஜ் செய்து கொண்டால் சருமம் மென்மையாகும். பத்து நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொண்டால் சருமத்தின் நிறமும் கூடும். உடம்பில் உள்ள சருமத்தின் கரடுமுரடுத்தன்மை நீங்குவதற்கு “பாடி பாலிஷிங்” செய்து கொள்வது நல்லது.

உங்களுடைய சருமத்திற்கு எந்த பேஷியல் பொருத்தமாக… சரியாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு பேஷியல் செய்து கொள்வது நல்லது. அதேபோல், என்ன உடை, எந்த நகை பொருத்தமாக இருக்கும் என்பதை அழகுக்கலை நிபுணருடன் ஆலோசனை செய்து கொள்ளலாம். சருமத்தின் நிறம் மற்றும் அதன் தன்மைக்கு தகுந்தாற்போல் உடை, நகை என அனைத்தும் பொருத்தமாக இருக்க வேண்டும்.

சுருண்டு பரந்த தலைமுடிக்கு… “ஹேர் ஸ்பா” செய்து கொள்ளவும். இதனால் தலைமுடி பளபளப்பாக ஜொலிக்கும். மினுமினுப்பும் அதிகமாகும். சுருண்ட முடிக்கு “ஹேர் ஸ்மூத்தினிங்” பண்ணலாம். பொடுகு தொல்லை இருந்தால் ஆயில் மசாஜ் செய்த பின்னர், ஹென்னா போட்டுக் கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு பிறகு இவற்றை பண்ணக்கூடாது.

இரண்டு மாதத்திற்கு முன்பு…

தொடர்ந்து “ஆரஞ்சு கால்வானிக்” மசாஜ் செய்து கொள்ளவும். மாதம் ஒருமுறை “பெடிக்குயர் மெடிக்குயர்” முறையில் கை, கால் நகங்கள் மற்றும் விரல்களை அழகு படுத்திக்கொள்ளவும்.

முகப்பருக்களை நீக்குவதற்கு, “பிம்பிள் ட்ரீட்மென்ட்” பண்ணவும். முகப்பரு வராமல் இருக்க… உணவு முறையை கடைபிடிக்கவும். முட்டை, எண்ணையில் பொரித்த உணவுகள், சில வகை மீன்கள் ஆகிய உணவுகளை தவிர்க்கவும். கேரட் ஜூஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் மற்றும் கண்கள் பொலிவடைந்து அழகாகும். பழங்கள், காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால் பருக்கள் வராது. அதிகமாக தண்ணீர் குடித்தாலும் பருக்கள் எட்டிப் பார்க்காது.

தற்போது வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம் என்பதால்… அவர்கள் வெயிலின் தாக்குதலுக்கு ஆளாவார்கள். இதனால் வெயில் தாக்குதலை தடுக்க… இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. வெயில் பட்டு கறுத்துப் போகும் கை, கால்களை பிளீச் மற்றும் ஸ்கிரப் செய்து கொள்ளலாம். “வெஜிடபிள் பேக்” போடவேண்டும். அதுமட்டுமின்றி, வெயில் படும் உடல் பாகங்கள் மீது ஆரஞ்சு சாறு பூசுவதால் மெருகேறும்.

ஒரு மாதத்திற்கு முன்பு…

திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பியூட்டி பார்லரில் ஸ்டீம் பாத் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் சுத்தமாகும். டெட் ஸ்கின் செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகும். சூரிய கதிர்களால் தோலில் ஏற்படும் அலர்ஜி நீங்கும். இப்படி அழகு படுத்துவதை பியூட்டி பார்லரில்தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. தேவையான பொருட்களை வைத்து வீட்டிலும் செய்து கொள்ளலாம்.

இரண்டு வாரத்திற்கு முன்பு…

“ஆரஞ்சு கால்வானிக்” மசாஜ் பண்ணியபிறகு, முத்து, தங்கம், வைரம் போன்றவை மூலம் பேஷியல் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் உங்களுடைய சருமத்திற்கு பொருத்தமான பேஷியல் செய்து கொள்வது நல்லது.

ஒரு வாரத்திற்கு முன்பு…

எந்த விதமான ஹேர் ஸ்டைல் உங்களுடைய முகத்துக்கு அழகாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த ஹேர் ஸ்டைலில் முடியை தயார் செய்யவும்.

மூன்று நாட்களுக்கு முன்பு…

உடம்பு முழுவதையும் பிளீச் மற்றும் வாக்ஸிங் செய்து கொள்ளவும். ஸ்கிரப் பண்ணிக் கொள்வதும் நல்லது. கை, கால்களுக்கு “பிரெஞ்சு மேனிக்குர் பெடிக்குர்” பண்ணினால் விரல்களும், நகங்களும் அழகு கூடும். முடிந்தால் நெயில் ஆர்ட் கூட பண்ணினால் இன்னும் அழகாக இருக்கும்.

இதுவரை பேஷியல் பண்ணாதவர்கள்கூட மூன்று நாட்களுக்கு முன்பாக முத்து, தங்கத்தில் பேஷியலை செய்து கொள்ளலாம். திருமணத்தின் போது முகம் அழகாக இருக்கும்.

திருமணத்திற்கு முந்திய நாள்…

கல்யாணத்திற்கு முதல் நாள் மெகந்தி போட்டுக் கொண்டால்… திருமணத்தின்போது மிகவும் அழகாக இருக்கும். மெகந்தி போடுவதற்கு முன்னர், அந்த இடத்தில் ஆயில் பூசிவிட்டு பின்னர் மெகந்தி போடவும். இன்றைக்கு “அராபிக் மெகந்தி” மற்றும் டிசைன்கள் அதிகமான “இந்தி மெகந்தி” ஆகியவை அனைவராலும் விரும்பப்படுகின்றன. காயும் வரை காத்திருந்து, மெழுகுவர்த்தியில் கையை சூடாக்குவது, கிராம்பு போட்டு கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடிப்பது போன்றவை செய்தால் மெகந்தி நன்றாக பிடிக்கும்.

75 சதவீதம் மெகந்தி உலர்ந்தபிறகு, சிறிது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்த திரவத்தில் பஞ்சை நனைத்து, மெகந்தியின் மேல் பகுதியில் ஒத்தி எடுக்கவும். இதனால் அடர்ந்த சிவப்பு கலந்த பிரவுன் கலர் கிடைக்கும். இதில் சர்க்கரைக்கு பதில் கரும்பு சாறு அல்லது வெல்லம் சேர்த்து பயன்படுத்தலாம். ஐந்து முதல் எட்டு மணி நேரம் மெகந்தியை கலைக்காமல் உலரவிடுவது நல்லது. நன்றாக காய்ந்தபிறகு, மெதுவாக பெயர்த்துவிட்டு, உடனே தண்ணீரில் நனைக்காமல் ஆறு மணிநேரம் கழித்து கழுவவும். மெகந்தி போடும்போது க்ளவுஸ் பயன்படுத்தினால் மற்ற இடங்களில் மெகந்தி பிடிக்காது.

மேற்கண்ட முறையை பயன்படுத்தினால் திருமணத்தின் போது… நீங்கள் ஜொலிப்பீர்கள் என்பதை சொல்ல வேண்டுமா… என்ன?!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply