இயர் போன் தரும் இன்னல்கள்

Loading...

இயர் போன் தரும் இன்னல்கள்இசையைக் கேட்பது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் ‘இயர் போன்’ அதற்கு சரியான உபகரணமாக அமைந்துவிடுவதில்லை. அதிலும் சாலையில் ‘இயர் போன்’ உதவியுடன் தன்னை மறந்து இசையை கேட்டபடி சென்றவர்கள் பலர் உலக வாழ்வுக்கு திரும்பாமலே உயிரை விட்டிருக்கிறார்கள்.

ஏனெனில் ‘இயர் போன்கள்’ அவர்களை வெளியுலக தொடர்பிலிருந்து துண்டித்து வேற்று உலகத்தில் சஞ்சரிக்க வைப்பதுதான் இந்த ஆபத்துக்கும், விபத்துக்கும் காரணம். இசை இனிமையை வழங்கவும், ‘இயர் போனை’ பாதுகாப்பாக பயன்படுத்தவும் இங்கே சில அனுபவங்கள் வழிகாட்டுகின்றன… வாரணாசியில் டிரைவர் சர்விந்த் சிங், 12 பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு பயணித்தார். காதில் ‘இயர் போன்’ மாட்டி ஆனந்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு பயணித்த அவருக்கு தூரத்தில் வந்த ரெயிலின் ஹாரன் ஒலி துளியும் கேட்கவில்லை.

எதையும் கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க, வேகமாக வந்த ரெயில் பள்ளி வேனை பந்தாடியது. தூக்கி எறியப்பட்ட வண்டியில் இருந்த பள்ளிப் பிள்ளைகள் பலர் மாண்டனர். காதிற்குள் கேட்ட இசையொலி, வெளியில் இருந்து வந்த ஒலியை தடை செய்ததால் பல மாணவ ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரைவர் மயக்கம் தெளிந்து கேட்ட கேள்வி, ‘இன்னுமா நான் உயிருடன் இருக்கிறேன். எனக்கு வேண்டாம் இந்த உயிர். என்னைக் கொன்று விடுங்கள்’ என்று கதறியழுதார்.

இது மட்டும் உதாரணமல்ல, இன்னும் ஏராளம் இருக்கிறது. பாட்டுக் கேட்டுக் கொண்டே சாலையை கடந்த பள்ளிச் சிறுவர்கள்கூட லாரியில் அடிபட்டு இறந் திருக்கிறார்கள். ரெயில்வே கேட்டில் காத்திருக்க பொறுமையின்றி, ‘இயர் போன்’ மாட்டியபடி தண்டவாளத்தை கடந்த பலர், ரெயிலின் ஹாரனும், பக்கத்தில் நின்றவர்கள் கத்தும் குரலும் கூட கேட்காமல் விபத்தில் சிக்கி உயிரை விட்டிருக்கிறார்கள். ஏன் இந்த அவலம்? யார் மீது குற்றம்? இதிலிருந்து மீள என்னதான் வழி? அஜாக்கிரதையாக இருப்பதைவிட்டுவிட்டு கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்.

அதற்கு ‘இயர் போன்’ களால் ஏற்படும் பாதிப்புகளின் பட்டியலை கொஞ்சம் கவனியுங்கள்… பாட்டுப் பிரியர்களுக்கு ‘இயர் போன்’ மகிழ்ச்சியான சாதனமாக தோன்றலாம். ஆனால் காதுகளுக்கு மிக ஆபத்தானது. உயிருக்கே உலை வைத்த செய்திகளையும் அன்றாடம் படிக்கிறோம். ‘இயர் போன்கள்’ காதுக்குள்ளே புகுந்து இசையால் காதை அடைத்துவிடுகிறது. கிட்டத்தட்ட 70 சதவீதம் காதுகளை ஆக்கிரமித்து கொள்வதால் வெளி விஷயங்கள் எளிதில் காதில் புக முடிவதில்லை.

‘இயர் போன்கள்’ பயன்பாட்டிற்கு வந்தபிறகு, காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இரைச்சல் நேரடியாக செவிப்பறைகளை தாக்குவதுதான். பொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடையும் ஒலி. இரண்டாவது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்தும். ‘இயர் போன்’ இசை அந்த இரண்டாவது ஒலி வகையைச் சேர்ந்தது.

அந்தச் சத்தத்தை கேட்க மனம் விரும்பலாம். ஆனால் காதுகள் ஏற்றுக்கொள்ளாது. நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும். இரைச்சல் 40 டெசிபல் அளவை தாண்டும்போது காதுகள் மெல்ல செவிட்டுத்தன்மையை அடைகிறது. தினமும் ‘இயர் போன்’ மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்கும். சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடும். இவைதான் காது கேளாமையின் அறிகுறிகள். ‘இயர் போன்’களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல.

அதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுதான் வாழ்வின் சோகம். பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் குறையும். நினைவாற்றல் குறையும். அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் இவை அத்தனையும் தொடர்ந்து வரும். தகவல் தொடர்பு மையங்களான ‘கால் சென்டர்’களில் வேலை செய்பவர்கள் ‘இயர் போன்’களை காதில் மாட்டிக் கொண்டு இரவு பகலாக மற்றவர்கள் பேசுவதை கேட்டே ஆக வேண்டும். அது அவர்கள் பணி.

அவர்கள் தங்கள் காது விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நேரத்தில் கொஞ்சம் சத்தத்தையாவது குறைத்து வைத்துக் கொள்ளலாம். இன்று ‘இயர் போனை’ உடலின் அங்கம்போல பயன்படுத்துபவர்கள் அநேகம். நாகரிகமாய் உடை அணிந்து கிளம்புபவர்கள்கூட உடையின் உள்ளே ‘இயர்போனை’ இணைத்து அதை காதில் திணித்து பயணத்தை பாட்டுக் கேட்டபடி தொடர்கிறார்கள். அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்பும் ‘இயர்போன்’ இசையை நிறுத்தாமல் அப்படியே சாலையை கடப்பதுதான் அவர்களை விபத்தில் சிக்க வைக்கிறது.

சர்விந்த் சிங் போலவே பாட்டுக் கேட்டபடி பயணிக்கும் பல டிரைவர்களும் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இசை கேட்கும் நீங்கள், உங்கள் காதுகளின் அழுகுரல் ஓசையையும் கொஞ்சம் கேளுங்கள். ‘இயர் போன்’களால் ஏற்படும் இன்னல்களை தெரிந்து கொண்ட பின் கொஞ்சம் உஷாராக இருக்கலாமே? வாழ்நாள் முழுவதும் நமக்கு காதுகள் தேவை.

அதை பாதியிலேயே தொலைத்து விட்டால் மீதி காலத்தை எப்படி கழிப்பது? ‘இயர் போன்’ கேட்கும் பழக்கம் உடையவர்கள் காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக காது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி காது கேட்கும் சக்தியை பரிசோதனை செய்யுங்கள். இசையை ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ‘இயர் போன்’களுக்கு உங்கள் காதுகளை இரையாக்கி விடாதீர்கள்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply