அந்திமக் கால நோயாளிகளுக்கு வரும் புண்கள்

Loading...

அந்திமக் கால நோயாளிகளுக்கு வரும் புண்கள்வயோதிகம் சற்று சங்கடமான பருவம் தான். அதிலும் ஒரு வாரமோ, ஒரு மாதமோ என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அந்திமக் காலம் மிகக் கொடுமையானது. அந்த அந்திமக் காலத்தில் உடலில் தோன்றும் புண்கள் அதைவிட கொடூரம்.

இப்படிப் பட்டவர்களை பராமரிப்பதும் சிரமம்தான். அதனால் தான் அந்திமக் காலத்தை தொட்டவர்களை முதியோர் இல்லத்திலோ, மருத்துவமனையிலோ சேர்த்து விடுகிறார்கள். இது மேலும் நோயாளிகளை சங்கப்படுத்தும். அதுபோக பெருமளவு பணச் செலவும், அவர்களை நிர்க்கதியாய் கைவிட்ட குற்ற உணர்வும் மிஞ்சும். அந்திமக் கால நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள், மருத்துவர்கள். ஒன்று புற்று நோயால் வருவது.

மற்றொன்று தொடர்ந்து படுத்தே இருப்பதால் ஏற்படும் ‘பெட் சோர்’ எனப்படும் படுக்கைப் புண். இதில் மிகவும் கடுமையானது புற்று நோய் புண் தான். வாய்ப் புற்று நோய், சருமப் புற்று நோய், மார்பகப் புற்று நோய் என்ற பல நோய்களும் இத்தகைய புண்கள் ஏற்பட காரணமாகின்றன. இந்த புண்கள் தரும் கடுமையான வலி, கெட்ட நாற்றம், நிணநீர், சீழ் வடிதல், ரத்தம் வடிதல், அருவருப்பான தோற்றம் போன்றவை நோயாளிகளின் மனதையும் உடலையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இதனால் அவர்களிடம், மற்றவர்கள் முன் வரவோ, பேசவோ சங்கடப்பட்டுக் கொண்டு ஒதுங்கியே இருப்பார்கள். சில சமயங்களில் அந்தப் புண்களில் புழுப் பிடித்துவிடுவதும் உண்டு. இப்படி உருவான புண்களை முற்றாக குணப்படுத்துவது முடியாத காரியமாகும். வயதான நிலையில் அவர்களை தினமும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதும் நடக்காத காரியம். அவர்களின் புண்கள் முற்றிலுமாக குணமாக முடியாது என்ற போதிலும் அவர்களின் வலி, சீழ் வடிதல், கெட்ட நாற்றம் போன்ற தொல்லைகளை தணிக்க முடியும்.

இதற்கு செவிலியர், மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் உடதவிகளை தேவையான வேளைகளில் நாடலாம். புண்களை மூடாது திறந்து வைக்கும் போதுதான், அதில் இலையான் என்ற கிருமி முட்டையிட்டு புழுக்கள் உருவாக காரணமாகிறது. அதனால் புண்களை எப்போதும் மூடியபடியே இருக்கவேண்டும். தினமும் குளிப்பது அவசியம்.

முடியாதவர்கள் புண்களை மட்டுமாவது தினமும் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அதே போல் அநேரியோபிக் பாக்டீரியா உருவாவதால் தான் புண்களில் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. இது பெருந்தொல்லையாகும். இதை தடுப்பதற்கு தினமும் குளிப்பது அவசியமாகும். மருந்து கட்டுவதற்கு முன் புண்களை நன்கு கழுவி சுத்தம் செய்த பின் மருந்திடவேண்டும்.

நாற்றம் சரியாகும் வரை தினமும் இரண்டு முறையாவது இப்படி சுத்தம் செய்யவேண்டும். இதையெல்லாம் செய்தால் வீட்டில் இருந்தே அந்திமக் கால நோயாளிகளை கவனிக்க முடியும். அதேநேரம் மருத்துவர்களின் தொடர் ஆலோசனையும் அவசியம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply